பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/360

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
358
அறத்தின் குரல்
 

ஆளை நமக்கு முன்பே வஞ்சகமாகப் பலி கொடுத்து விட்டார்களே! எப்படிப் பார்த்தாலும் அவர்கள் நம்முடைய நிலைக்கு மிகவும் தாழ்ந்தவர்களே” -என்று கூறினான் துரியோதனன்.

“அதிருக்கட்டும் அப்பா! மேலே செய்ய வேண்டிய காரியத்தைக் கூறு” -என்றான் வீட்டுமன்.

“செய்ய வேண்டியதென்ன? நம்முடைய படைகளைத் தக்க முறையிலேயே அணிவகுத்துப் புறப்படச் செய்யுங்கள். அதுதான் செய்ய வேண்டியது” -என்று கட்டளையிட்டான் துரியோதனன். வீட்டுமன் உடனே படைகளை வரிசை முறைப்படி அணிவகுத்து நிறுத்தத் தொடங்கினான். முன்னணித் தேர்ப்படையினராக, வீட்டுமன், துரோணர், அசுவத்தாமன் , பூரிசிரவா ஆகியோர் நின்றனர். மகாரதாதிபர்களாகச் சோமவரதத்தன், பகதத்தன், துன்மருஷணன் ஆகிய மூவரும் நின்றனர். சமராதிபர்களாக, கிருதவன்மனும், கிருபனும், சகுனியும் நின்றனர். இப்படி வீட்டுமன் படைகளை அணிவகுத்துக் கொண்டிருந்தபோதே கர்ணன் கண்கள் நெருப்பைக் கக்கின. அவன் நெஞ்சு ஆத்திரத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. தன்னையும் தன்னுடைய வீரத்தையும் மதித்து முன்னணித் தேர்ப்படையினராகிய அதிரதத்தலைவர்களில் ஒருவராக வீட்டுமன் தன்னைத் தேர்ந்தெடுப்பான் என்று எதிர்ப்பார்த்தான் கர்ணன். ஆனால் வீட்டுமனோ கர்ணனையும் அவனது வீரத்தையும் இலட்சியமே செய்ததாகத் தோன்றவில்லை. அதிரதாதிபர், மகாரதாதிபர், சமரதாதிபர் என்ற மூன்று அணிவகுப்புக்களிலும் வீட்டுமன் கர்ணனுடைய பெயரைப் பிரஸ்தாபிக்காமலே இருந்து விட்டான். கடைசியில் மிகவும் பின்னணிப் படையாகிய அர்த்தராதிபர்களில் கர்ணனை முதல்வனாக நியமித்துப் படைத்தளபதியாகிய வீட்டுமன் கட்டளை பிறப்பித்தான். அதைக் கேட்டானோ இல்லையோ, அதுவரை பேசாமல் இருந்த கர்ணன் கோபம் பொங்கிடக் குமுறியெழுந்தான்.