பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

359



“ஏ கிழவா! உன்னைப் படைத் தலைவனாக நியமித்து கர்வத்தினால் தானே நீ இப்படிச் செய்கிறாய்? வேண்டுமென்றே என்னை அவமதிக்க வேண்டும் என்று இப்படிக் கடைசிப் படையில் நியமிக்கின்றாய் போலும்! இப்போது எனக்கு இருக்கின்ற ஆத்திரத்தில் உன்னை அப்படியே கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போலத் தோன்றுகிறது. கையாலாகாத வெறும் கிழவனாகிய உனக்கு எவ்வளவு திமிர் இருக்கிறது?” -என்று கர்ணன் பேசிய விதத்தைப் பார்த்தால் அவன் உண்மையிலேயே வீட்டுமன் மேல் பாய்ந்து விடுவான் போலிருந்தது. நல்லவேளையாகத் துரியோதனன் அவனை நெருங்கி நயமாகவும் இதமாகவும் சில சொற்களைக் கூறிச் சமாதானப்படுத்தினான்.

“ஆயிரமிருந்தாலும் படைத்தலைவரென்று அவரை நியமித்து விட்டோம்! நல்லதோ, கெட்டதோ அவர் கூறுகிறபடி கேட்பதுதான் சிறந்தது. எல்லா விவரமும் தெரிந்த நீயே இப்படி ஆத்திரப்பட்டால் என்ன செய்வது? என் சிநேகிதத்துக்காகவாவது பொறுத்துப் போகலாகாதா? உனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது நான் சொல்ல?” என்று துரியோதனன் கூறவும் கர்ணன் சமாதானமடைந்தான்.

படைகளின் நடுவே மதிப்பிற்குரிய அரசர்களுக்கு மத்தியில் கர்ணன் தன்னை அவமதித்ததை வீட்டுமனால் பொறுக்க முடியவில்லை! துரியோதனன் கர்ணனைச் சமாதானப்படுத்தி விட்டு வந்தவுடன் வீட்டுமன் ஆத்திரத்தோடு அவனை நோக்கி ஒரு சபதம் செய்தான் -“துரியோதனா! இந்த நிகழ்ச்சி என் மனத்தையும் என் எண்ணங்களையும் மாற்றி விட்டது. படைத்தலைமை வகிக்க ஒப்புக் கொண்ட குற்றத்திற்காக அதை மட்டும் கைவிடத் தயங்குகின்றேன். இந்தப் போரில் நான் ஆயுதமெடுத்து சண்டை செய்யமாட்டேன். ஒதுங்கி நின்று அணிவகுப்பு யோசனைகளை மட்டுமே கூறுவேன். இது என் சபதம். இப்படி ஒரு கொடிய சபதத்தை வலுவில் கூறுகிற அளவிற்கு என் மனத்தைப் புண்படுத்தி விட்டது சற்றுமுன் நடந்த