பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

அறத்தின் குரல்

நிகழ்ச்சி” -என்று வீட்டுமன் இப்படிக் கூறிவிட்டு வில்லைக் கீழே எறிந்து விட்டான்.

“தவறாக நடந்துவிட்ட நிகழ்ச்சிக்காக என்னை மன்னித்துவிடுங்கள். அதற்காக இந்தச் சபதம் வேண்டாம், நீங்களில்லாத போர் என்ன போர்?” -என்று மன்றாடினான் துரியோதனன்.

“இல்லை அப்பா! நான் சபதம் செய்தது செய்தது தான். இனி அதை மீட்பதற்கில்லை” -வீட்டுமன் உறுதியிலிருந்து தளர மறுத்துவிட்டான். கடைசிக் கட்டத்தில் வேறென்ன செய்வது? படைகள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டன. சபதப்படியே ஆயுதமில்லாமல் வெறுங்கையோடு தான் சென்றான் வீட்டுமன். துரியோதனன், கர்ணன் முதலியவர்களும் அணிவகுப்பு முறைப்படியே சென்றனர். பதினொரு அக்குரோணி அளவுள்ள கெளரவசேனை பேராரவாரத்தோடு களத்தை நோக்கி நடந்தது. குருகுலக் களத்தில் பாண்டவர் படைகளும் கௌரவர் படைகளுமாகப் பதினெட்டு அக்குரோணிப் படைகள் நின்றன. ஒரே படை வெள்ளம். இந்த மாபெரும் போரினால் ஈரேழு பதினான்கு புவனங்களும் என்ன ஆகுமோ என்று யாவரும் கலங்கினர். இவ்வளவு படைகள் நிறைந்த போர்க்களத்தை இதற்கு முன் கண்களால் பார்த்திராத துரியோதனன் நடுநடுங்கிப் பதறும் குரலுடன் வீட்டுமனை நோக்கி, “இவ்வளவு படைகளுமாகப் போரிட்டு யார் யாரால் எப்போது இந்த யுத்தத்தின் முடிவு தெரியுமோ?” என்று மலைத்துப் போய்க் கேட்டான்.

“முடிவு தெரியாமலென்ன? நான் எதிர்த்துப் போரிட்டால் இங்கு கூடியிருக்கும் பதினெட்டு அக்குரோணிப் படைகளையும் அழித்து ஒருநாள் பகற் போதுக்குள் முடிவு காட்டுவேன். துரோணர் போரிட்டால் மூன்று பகற் போதுக்குள் முடிவு காட்டுவார். கர்ணன் ஐந்து நாள் போரிட்டால் முடிவு காணமுடியும். துரோணர் மகன் அசுவத்தாமன் போரிட்டால் இவைகளை அழித்து ஒரே ஒரு