பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/368

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
366
அறத்தின் குரல்
 


“எழுந்திரு! கால்களைப் பற்றுவது பிறகு இருக்கட்டும். முதலில் உன் கடமையை மனத்தில் இறுகப்பற்றிக்கொள். கீழே போட்டுவிட்ட வில்லை எடுத்து இறுகப்பற்றிக்கொள். ‘போர் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணங்களை இறுக உறுதியாக உள்ளத்தில் பற்றிக் கொள்” கண்ணன் அர்ச்சுனனின் தோள்களைப் பற்றி எழுப்பித் தூக்கி நிறுத்தினான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் கெளரவர்கள் சேனை தங்கியிருந்த எதிர்ப்பக்கம் சென்று தங்களுக்கு வேண்டியவர்கள் சிலரைச் சந்தித்து விட்டு வரக்கருதினர் பாண்டவர். கண்ணனும் பாண்டவர்கள் ஐவருமாக ஒரு தேரின் மேலே ஏறிக் கொண்டு கெளரவர்கள் படை நின்று கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். ஒவ்வொருவராகச் சந்தித்துப் பாண்டவர்கள் நிலைபற்றி அவர்களிடம் கூறி விளக்குவதே கண்ணனின் நோக்கம். அந்த நோக்கத்தின்படி அவர்கள் முதலில் வீட்டுமனைச் சந்தித்தனர்.

“ஐயா! இந்தப் போரில் நியாயம் பாண்டவர்கள் பக்கம்தான் இருக்கிறது! உங்களைப் போன்ற மூதறிஞருக்கு நன்கு தெரியும். இப்படித் தெரிந்திருந்தும் பாண்டவர்களை எதிர்த்து இடுகின்ற போரில் நீங்கள் முன்னணியில் நிற்கலாமா? நீங்களே இந்தப் போரில் தலைமை தாங்கி நின்றால் பாண்டவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்?” என்று கண்ணன் வீட்டுமனை நோக்கிப் பாண்டவர்கள் சார்பிலே கேட்டான்.

“கண்ணா! அருமைப் பாண்டவர்களே! போரில் வெற்றி நிச்சயமாக உங்களுக்குத்தான்! எதிர்கால உலகம் தருமனது இன்பம் நிறைந்த செங்கோலாட்சிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் இந்தப் போரில் உங்களுக்கு எதிராக நான் ஆயுதம் எடுக்க மாட்டேன். அதோடு என்னைச் சாகச் செய்வதற்குரிய வழியையும் உங்களுக்குக் கூறிவிடுகிறேன். நான் விரைவில் இறந்து விட்டால் பின் உங்களுக்குச் சீக்கிரமே வெற்றி கிடைத்துவிடும். முன்பொரு காலத்தில் என்னைக் கொல்ல வேண்டுமென்