பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

35


காலம் மீண்டும் வெள்ளமாகப் பாய்ந்தோடியது. குந்தியின் வயிற்றில் ‘கர்ணன்’ பிறந்தான். தேவர்களும் அறியாத கொடைப் பண்பை நிரூபித்துக் காட்டுவான் போலத் தோன்றிய இந்தப் புதல்வன் செவிகளில் கவச குண்டலமும் ஈகை யொளி திகழும் முகமுமாக விளங்கினான். உலகும், குலமும், பழிக்கும் என அஞ்சிய குந்தி இந்தப் புதல்வனை ஒரு பேழையில் பொதிந்து வைத்துக் கங்கை வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டாள். பேழை கங்கையிலே மிதந்து கொண்டே குழந்தையுடன் சென்றது. அதிரதன் என்னும் பெயரைப் பெற்ற ‘சூதநாயகன்’ என்கிற தேர்ப்பாகன் தன் மனைவி ‘ராதை’ என்பவளுடனே நீராடக் கங்கைக்கு வந்தான். குந்தி மிதக்கவிட்ட பேழையை இவர்கள் கண்டெடுத்தனர். வெகுநாட்களாக மக்கட்பேறின்றி வருந்தி வந்த இவர்கள் மனமகிழ்வோடு அழகும் அருளொளியும் ததும்பும் கர்ணனாகிய குழந்தையை இன்னானென்று தெரியாமலே வளர்த்து வந்தனர். இது தான் குந்தியின் கன்னிப் பருவத்தில் நடந்த மறைமுகமான கதை.

3. ஐவர் அவதாரம்

பாண்டுவின் திருமணத்தை விரைவில் நடத்திவிட வேண்டுமென்பதற்காக வீட்டுமன் அனுப்பிய தூதுவர்கள் குந்தி போச நாட்டை அடைந்து சூர மன்னனைச் சந்தித்தனர். குந்தியைப் பாண்டுவுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்குச் சூரன் உவகையோடு சம்மதித்தான். ஒருப்பட்டு இசைந்த கருத்தைத் துருவாசர் சென்று வீட்டுமனுக்குக் கூறினர். வீட்டுமன் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஒரு குறிப்பிட்ட மங்கல நாளில் குந்திக்கும் பாண்டுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. திருமணமான புதிதில் மண இன்பத்தை இயற்கைச் சூழலில் நுகருவதற்காக இமயமலைச் சாரலிலுள்ள அழகிய பூம்பொழில்களில் பொழில் விளையாடக் கருதி