பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/371

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
369
 

கொடிகளும் முரசுக்கொடிகளுமாக வானளாவிய மலைகளில் வீழும் அருவிகளைப் போல உயர்ந்து அசைந்தாடின. விண்ணையும் மண்ணையும், திசைகள் எட்டையும் கிடுகிடுக்கச் செய்வது போலப் போர் முரசங்கள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. திருச்சின்னங்களும், எக்காளங்களும் அதிர்ந்தன. யானைகள் பிளிறின. குதிரைகள் கனைத்தன. தேர்ச்சக்கரங்கள் பேரொலியுடன் இடி இடிப்பது போல உருண்டன. வீரர்கள் உறையிலிருந்து வாளை உருவும் ஒலி களம் முழுவதும் எதிரொலித்தது. இருபுறமும் எட்ட நின்று கொண்டிருந்த முன்னணித் தேர்ப்படைகள் ஒன்றையொன்று நெருங்கின. கண்ணன் வலதுகையை அசைத்து சமிக்ஞை செய்தான். வீட்டுமனும், சிவேதனும் ஆகிய இருபுறத்துப் படைத்தலைவர்களும் ஒருவருக் கொருவர் ‘போர் தொடங்கலாம்’ என்ற குறிப்பைக் கண்களாலேயே தெரிவித்துக் கொண்டனர்.

வாள்களும் வேல்களும் மின்னின. வில்நாண்கள் வளைந்தன. நாணொலி இடிமுழக்கத்தைத் தோற்கச் செய்துவிடும் போல இருந்தது. வியூகங்களின் படியே அணிவகுப்பு முறை மாறாமல் தேர்ப்படையோடு தேர்ப்படையும், காலாட்படையோடு காலாட்படையும், யானைப்படையோடு யானைப்படையும், குதிரைப்படையோடு குதிரைப்படையும் கலந்தன. கடல் கடலோடு மோதினாற் போல இருபுறத்துப் படைகளும் சங்கமமாயின. ‘போர்’ ‘போர்’. பயங்கரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் போர் இதோ உண்மையாகவே நடக்கத் தொடங்கிவிட்டது. பதினெட்டு அக்குரோணிப் படை வீரர்களின் ஆண்மை , அந்தக் குருகுலத்து மண்ணில் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் இரத்த விளையாட்டு விளையாட ஆரம்பித்துவிட்டது. மண் இரத்தத்தால் நனைந்தது. விண் ஓசையால் நிறைந்தது. திசைகள் அவலக் குரல்களால் நிறைந்தன, தர்மத்தையும் அதர்மத்தையும் நிறுவையிடும் போரின் முதல்நாள் மலர்ந்து விரிந்து விட்டது!

அ.கு.-24