பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. சிவேதன் முடிவு


அர்ச்சுனனின் தயக்கத்தைக் கண்ணன் தன் அறிவுரையினால் போக்கிய பின்பு தொடங்கிய முதல் நாள் போர் விரைவாக வளரலாயிற்று. பிரளய காலத்துப் பேரொலி போல் திசைகள் அதிர்ந்து இது போகுமாறு போர் நடந்தது. பாண்டவருக்குத்துணைவந்த அரசர்கள் தங்களிடமிருந்த அம்புகளை எல்லாம் எதிரிகளின் மேல் ஆத்திரந்தீர எய்து தீர்த்துவிட்டார்கள். அம்புகள் தீர்ந்தால் என்ன? உள்ளத்திலிருந்த ஆத்திரம் தீரவில்லையே! பகைவர்களால் எய்யப்பட்டு ஏற்கனவே தங்கள் மார்பில் நுழைந்து நின்ற அம்புகளை வலியையும் பொருட்படுத்தாமல் பிடுங்கிப் பகைவர்கள் மேலேயே எறிந்தார்கள். நூழிலாட்டு என்று ஒருவகைப் போர் முறையாகும் இது! போரில் வலது கையை இழந்து போனவர்கள் இடது கையால் பகைவர்மேல் அம்புகளைப் பொழிந்தனர். இரண்டு கைகளையுமே இழந்தவர்கள் அம்புகளை வாயில் கவ்விக் கொண்டு பற்களால் உந்தி எறிந்தனர். வீரம் என்ற ஒன்று. ஆண்மை என்ற ஓன்று, தனியே வடிவெடுத்து வந்து அங்கே அந்தக் குருக்ஷேத்ரப் போர்க்களத்திலே நிதரிசனமாக விளங்கிக் கொண்டிருந்தது. பாண்டவர், கெளரவர் ஆகிய இரு திறத்தார்களுமே தத்தம் கட்சியில் உண்மையான ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போர் புரிந்தனர். உறவு, பந்தம், பாசம் இவைகளைப் பற்றிய தயக்கத்தை எல்லாம் கண்ணனின் தெளிவுரையால் நீக்கிவிட்டுப் போருக்குத் துணிந்து விட்ட அர்ச்சுனன் முதறிஞனாகிய வீட்டுமனையே எதிர்த்து நின்றான். வீட்டுமனும் அர்ச்சுனனும் போர் செய்த கண்கொள்ளாக் காட்சி போர்க்களத்தையே அதிசயிக்கச் செய்தது. வீட்டுமன் உதவிக்காக தூரியோதனனும், அர்ச்சுனன் உதவிக்காக தருமனும், சில சிற்றரசர்களை உடன் அனுப்பியிருந்தனர். சகுனி, சல்லியன் முதலியவர்கள்