பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

371

வீட்டுமன் பக்கமும்: விந்தரன், அபி மன்னன் முதலியோர் அர்ச்சுனன் பக்கமும் துணையாக நின்றனர். ஒருவருக்கொருவர் எதிரிகள் என்ற முறையில் இருவரும் மகா உக்கிரமாகப் போர் புரிந்தார்கள்.

வீட்டுமன் போர் செய்வதற்காக நின்று கொண்டிருந்த தேரின் உச்சியில் ஒரு பெரிய பாம்புக் கொடி பறந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் அந்தக் கொடியின் மேல் பன்னிரண்டு அம்புகளை அடுத்தடுத்து வேகமாகச் செலுத்தித் துளைத்து விட்டான். வீட்டுமன் மார்பின் மேலும் உடலிலும் பூண்டிருந்த கவசத்தில் அர்ச்சுனனால் ஏவப்பட்ட ஒன்பது அம்புகள் தைத்திருந்தன. போரில் அனுபவம் மிக்கவனும் திறமைசாலியுமாகிய வீட்டுமன் இளைஞனான அர்ச்சுனனின் போர் வன்மை கண்டு மலைத்துப் போனான். கௌரவர்கள் பக்கம் சகுனி, சல்லியன் முதலியவர்கள் முன்னணியில் நின்றனர். வீட்டுமனைத் தாக்கியதோடு மட்டும் நின்று விடாமல் இவர்களையும் ஒரு கலக்குக் கலக்கி விட்டான் அர்ச்சுனன். இதனால், துரியோதனாதியர்களின் படை அணிவகுப்பே நிலை குலைந்து சிதறிப் போய்விட்டது. இந்த நிலையில் உத்தரனும் சல்லியனும் நேரடியாக ஒருவருக் கொருவர் எதிர் நின்று விற்போரில் இறங்கினர். போர்க்களத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த முனைப்பான எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் இவர்கள் எதிர்ப்பு முக்கிய நிலையை அடைந்திருந்தது. இருதரப்பிலிருந்தும் ‘விர் விர்ரென்று’ மழை பொழிவது மாதிரி அம்புகள் வேகமாகப் புறப்பட்டு மோதிக் கொண்டிருந்தன.

இங்ஙனம் இவர்கள் இருவருக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த போரில் திடீரென்று உத்தரன் கை ஓங்கியது. சல்லியன் நின்று கொண்டிருந்த தேரின் குதிரைகள் அம்பு மாரியைத் தாங்க முடியாமல் இரத்த வெள்ளத்தினிடையே வீழ்ந்தன. தேர்ப்பாகன் மார்பில் சேர்ந்தாற்போல் நாலைந்து அம்புகள் தைத்து அவன் உயிரைப் பறித்துக் கொண்டன. சல்லியன் நம்பிக்கை இழந்து விட்டான். அவன் உடல்