பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/374

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
372
அறத்தின் குரல்
 

மட்டுமல்ல; உள்ளமும் தளர்ந்து விட்டது. எல்லாம் தளர்ந்து போன இந்தச் சமயத்தில் உத்தரன் எய்த அம்புகளால் கையிலிருந்த வில்லும் நாணறுந்து இரண்டு துண்டாக முறிந்து விழுந்தது. நாணறுந்த பின்னும் நாணமில்லாமல் நின்ற சல்லியன் உத்தரவின் மேல் அடக்க முடியாத ஆவேசம் கொண்டுவிட்டான். ஆவேச வேகத்தில் போர்முறை, நீதி, நியாயம் எல்லாம் மறந்து விட்டன அவனுக்கு. தன் ஆத்திரத்தை முழுதும் ஒன்றாகத் திரட்டி அருகிலிருந்த ஓர் கூரிய வேலை எடுத்து உத்தரகுமாரனின் மார்பைக் குறிவைத்து எறிந்து விட்டான். முறைப்படி போர் முடிந்து விட்டது என்றெண்ணி வில்லையும் அம்பறாத் தூணியையும் கழற்றிக் கீழே வைத்திருந்த உத்தரன் திடீரென்று ஏவப்பட்ட வேலின் பாய்ச்சலை எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் அதற்கு இரையானான். சல்லியன் வீசிய வேல் உத்தரனின் நெஞ்சுக்குழிக்குள் ஆழப் பதிந்துவிட்டது. அடியற்ற மரம்போல் உயிரிழந்து கீழே சாய்ந்தான் உத்தரன். அவன் உயிர் விரைவில் உடலை விட்டுப் பிரிந்தது. வெற்றி வீரனாகப் போர்க்களத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந்த உத்தரன், சில விநாடிகளில் விண்ணகம் புகுந்து விட்டான். சல்லியன்தான் உத்தரனைக் கொன்றான் என்றறிந்து துரியோதனாதியர் மனமகிழ்ந்தனர். தங்கள் துணைவனான உத்தரன் மறைவு பாண்டவர்களை மனங்கலங்கச் செய்தது. உத்தரனைக் கொன்ற சல்லியனைப் ‘பழிவாங்கியே தீருவேன்’ என்று உறுதி செய்து கொண்டு கிளம்பி விட்டான் வீமன். கதாயுதமும் கையுமாக விமன் துரத்திக் கொண்டு வருவதைக் கண்ட சல்லியன் பயந்து போய் ஓடிப்பதுங்கிக் கொண்டு விட்டான். சல்லியனுக்குப் பதிலாகத் துரியோதனனும் அவனுடைய தோழர்களும் சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்து வந்தார்கள். இருவகையினரும் ஒருவரோடொருவர் நெருங்கி எதிர்த்தனர். வீமனும் முரட்டுப் பலசாலி! துரியோதனனும் முரட்டுப் பலசாலி! இரண்டு முரட்டுப் பலசாலிகள் சேர்ந்து போரிட்ட காட்சி களத்திலேயே