பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/375

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
373
 

பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. கதாயுதத்தால் ஓங்கி அடித்துப் புடைத்த வீமன் துரியோதனாதியர் படை அணிவகுப்பே சிதறிப் போகுமாறு செய்தான். துரியோதனனுடைய தேரை அடித்துச் சிதைத்துத் தூள் தூளாக ஆக்சி விட்டான். ஆவேசமடைந்து வீமன் மேல் வில்லை வளைத்தான் துரியோதனன். சரியாக அதே நேரத்திற்கு அந்த வில்லையும் கதாயுதத்தால் முறித்துக் கீழே தள்ளி விட்டான் வீமன். துரியோதனன் போர்க்களத்தில் அனாதையாக, அனாதரவாக நின்றான். ‘அவன் தோற்றுவிட்டான்’ என்றே அவனைச் சுற்றி நின்றவர்கள் நினைத்தார்கள். அந்தப் பரிதாபகரமான நிலையில் துரியோதனனின் மைத்துனர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். மைத்துனர்களோடு சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்தான் துரியோதனன். வீமன் தயங்கவில்லை. தனது தைரியத்தை மறுபடியும் அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினான். ‘தலை சிதறிப் போகாமல் பிழைத்தால் போதும்’ என்று மைத்துனர்களை ஓட ஓட விரட்டினான். வீமனது ஆற்றலுக்கு எந்த விதத்திலும் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதற்குள் பாண்டவர்களைச் சேர்ந்தவனும், சிவபெருமான் அருளிய வில்லைப் பெற்றவனும் ஆகிய ‘சிவேதன்’ என்பவன் சல்லியன் பதுங்கிக் கொண்டிருந்த இடத்தை விசாரித்து அறிந்து கொண்டு அவனைத் தாக்குவதற்கு ஓடினான். உத்தரனைக் கொன்ற சல்லியனைப் பழிவாங்க வேண்டும் என்பது அவனுடைய ஆத்திரம். அதிர்ஷ்டவசமாக எந்த இடத்தில் சல்லியன் இருப்பதாகச் சிவேதன் எண்ணினானோ அங்கே அவன் அகப்பட்டுவிட்டான். சிவேதனுக்கும் சல்லியனுக்கும் இடையே கடுமையான விற்போர் நடக்கத் தொடங்கிற்று. சல்லியனோடு துணையாய் இருந்து சிவேதனை எதிர்ப்பதற்கு துரியோதனன் ஆறு பெரிய வீரர்களை அனுப்பினான். அந்த ஆறுபேரும் சல்லியன் ஒருவனும் ஆக ஏழுபேர் சேர்ந்து சிவேதனோடு விற்போர் செய்தார்கள். ஆனால் சிவேதன் தனது அதிசயமான