பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/378

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
376
அறத்தின் குரல்
 

படைகளும் கலந்து ஒன்றொடொன்று மோதிப் போரைத் தொடங்கின. ஒரு காலத்தில் தன் தந்தைக்கு நண்பராக இருந்து பின் பகை கொண்ட துரோணரை நேருக்குநேர் நின்று எதிர்த்தான் துட்டத் துய்ம்மன். துரோணர் விற்கலைக்கென்றே பிறந்த வீரபுருஷராகையால் அவரைத் துட்டத்துய்ம்மனால் முறியடிக்க முடியவில்லை. துரோணருடைய சரமாரியான அம்பு மழையினால் துட்டத்துய்ம்மன் தான் அலுத்துப் போனான். துட்டத்துய்ம்மனுக்கு உதவியாக வீமனும் வந்து சேர்ந்து கொண்டான். இருவருமாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்தார்கள். வீமன் துட்டத்துய்ம்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்டு எதிர்ப்பக்கத்தில் கலிங்க வேந்தன் வீமனை எதிர்ப்பதற்காக வில்லை வளைத்துக் கொண்டு வந்து விட்டான். கலிங்க வேந்தனின் படையில் யானைகளின் தொகை சற்றே அதிகம். மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் தான் வீமனுக்கு அதிக மகிழ்ச்சி. கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான் வீமன். பின் வாங்குவதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை கலிங்கனுக்கு. தன்னுடைய யானைகளுடன் மட்டும் அன்றிப் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்த பின் ‘தோல்வியடைந்தேன், தோல்வியடைந்தேன்’ என்று கூறிக் கொண்டோடுபவன் போல் புறமுதுகிட்டோடினான் கலிங்க வேந்தன்.

கலிங்கன் ஓடியபின் வீட்டுமன் வீமனை எதிர்த்தான். பாட்டனாராகிய வீட்டுமனுக்கும் வீமனுக்கும் போர் நடந்தது. முன்பு சிவேதன் செய்தது போலவே வீட்டுமனின் வில்லை ஒடித்தும் தேரைச் சிதைத்தும் அவனுக்குத் தொல்லை கொடுத்தான் வீமன். ஒடிந்து விழுந்த வீட்டுமனின் தேர்ச் சட்டம் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதனாலேயே அவனுடைய தேரோட்டியை அடித்து வீழ்த்தி விட்டான். முன்பு வீமனுக்குத் தோற்று ஓடிப்போன கலிங்க வேந்தனும் அவனைச் சேர்ந்தவர்களும் வீட்டுமனுக்கு உதவ ஓடி