பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36
அறத்தின் குரல்
 


மனைவியோடு பாண்டு புறப்பட்டான். இதற்குள் மந்திர ராசன் என்ற வேறொர் அரசனும் ‘மாத்திரி’ என்ற பெயரையுடைய தன் மகளையும் பாண்டுவுக்குத் தானாகவே விரும்பி மணமுடித்துக் கொடுத்திருந்தான். இரு மனைவியருடனும் இமயமலைச் சாரலுக்குச் சென்ற பாண்டு பொழுது போக்குக்காக வேட்டையாடவும் விரும்பினான். தங்கியிருந்த பொழிலில் குந்தியையும் மாத்திரியையும் விட்டுவிட்டு வில்லும் கணைப்புட்டிலும் சுமந்து வேட்டைக்குப் புறப்பட்டான் பாண்டு, வேட்டையாடுவதற்கு அருமையான பலவகை விலங்குகளை எளிமையாக வேட்டையாடி வீழ்த்தியபடியே மேலும் மேலும் பெருகுகின்ற வேட்டை விருப்பத்தோடு மலைச் சாரல் வழியே வில்லேந்திய கையனாய்ச் சென்று கொண்டிருந்தான் அவன். இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது, தொலைவில் ஓர் ஆண்மானும், பெண்மானும் தம்முட்டி ஒன்று பட்டு இன்ப நிலையில் ஆழ்ந்திருக்கும் காட்சி அவன் கண்களுக்குத் தென்பட்டது. பாண்டுவின் போதாத வேளைதானோ என்னவோ, அந்த நிலையிலிருந்த அவ்விரண்டு மான் களையும் அவன் கண்டது? அறிவற்ற ஓர் ஆசை அவன் மனத்தில் எழுந்தது. அந்த மான்களை வேட்டையாடினால் என்ன என்ற ஆசை தான் அது! அவைகள் இருக்கின்ற ‘மயங்கிய நிலை’ குறி தப்பாமல் அம்பு செலுத்துவதற்கு ஏற்றபடி அமைந்திருந்தது. பாண்டுவின் மனத்தில் கருணை சிறிதளவும் எழவில்லை ! ஆசையே விஞ்சி நின்றது. கை வில்லை வளைத்தது! ‘அம்பு’ ஒன்று விர்ர்ர்ரென்று குறி வைத்த திசை நோக்கிப் பறந்த அடுத்த விநாடியில் அந்த ஆண் மான் அலறிக் கொண்டே கீழே சாய்ந்தது. சாய்ந்த மறுகணம் அங்கே மான் இல்லை. மார்பிலே குருதி ஒழுக ஒரு முனிவர் எழுந்து நின்றார். பாண்டு ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டே திகைத்துப் போய் நின்றான். ‘தான் அம்பு எய்த மான் எங்கே? இந்த முனிவர் எப்படி வந்தார்? தம் அம்பு இவர் மார்பில் எப்படித் தைத்தது?’ என்ற வினாக்கள் அவன் மனத்தில் எழுந்தன.