பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

அறத்தின் குரல்

முதலியவர்கள் வளைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். வீமனைத் துரியோதனனும் அவன் தம்பிமார்கள் தொண்ணூற்றொன்பதின்மரும் எதிர்த்துப் போரிட்டனர். மாமனான சகுனியும் துரியோதனன் பக்கம் நின்று கொண்டிருந்தான்.

இரு திறத்தாருக்கும் போர் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது. வீமன் மகனான கடோற்கசன் அவனுக்குத் துணை செய்து உதவ வந்திருந்தான். அர்த்த சந்திரவடிவமான நுனியை உடைய அம்புகளைத் தொடுத்துப் போர் செய்தான் கடோற்கசன். அடுத்தடுத்து துரியோதனனுடைய மார்புக் கவசத்தைத் துளைத்த இந்த அம்புகள் இறுதியில் கவசத்தையே பிளந்து மார்பை ஊடுருவிவிட்டன. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும் வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் அங்கேயே களத்தில் மயக்கமுற்று விழுந்து விட்டான். துரியோதனனின் தேரோட்டியை அபிமன்னன் ஏவிய அம்பு கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தன. உடனே துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி வீட்டுமனுக்குத் தெரிவிக்கப் பட்டது. துரியோதனன் உடலைத் தனியே ஒரு தேரின் மேல் எடுத்துக் கொண்டு ஒதுக்குபுறமான ஓர் இடத்திற்குப் போய்த் தக்க சிகிச்சைகளைச் செய்து பிரக்ஞை உண்டாக்கினான். தெளிவான நிலையை அடைந்ததும் அவனைப் பத்திரமான இடத்தில் போய் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மீண்டும் வீமனோடு போரைத் தொடர்ந்தான். உண்மையான ஆத்திரத்தோடு வீட்டுமன் மனங்குமுறிச் செய்த இந்த விற்போரை அர்ச்சுனன், வீமன் முதலியவர்கள் எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். வீட்டுமனோடு எதிர்த்துப் போர் செய்ய வேண்டும் என்பதையே மறந்து அர்ச்சுனன் அவன் போர் செய்யும் அழகைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். அர்ச்சுனனுடைய தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கண்டு கொண்டான்.