பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

379


“உன் பாட்டனார் பெருஞ்சினத்தோடு வில்லை வளைத்துப் போர் செய்கிறார். நீ அவரை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்! இதன் விளைவாக யாருக்கு அழிவு வரும் என்பதை நீ யோசித்தாயா?” என்று சினம் பொங்கும் குரலில் கூறிக் கொண்டே அர்ச்சுனனின் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான் கண்ணன். எப்படியும் தானே வீட்டுமனை எதிர்த்து அழிக்காமல் விடுவதில்லை என்பது கண்ணனின் நோக்கம், கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு வீட்டுமனின் தேரில் தாவிப் பாய்ந்து ஏறிவிட்டான் அவன். கண்ணனின் எண்ணமும் சுலபமாக நிறைவேறிவிடும் போலிருந்தது. வீட்டுமனைத் தேர்த்தட்டின் மேல் கீழே தள்ளிக் கழுத்தில் சக்கராயுதத்தால் அறுத்துத் துளைக்கத் தொடங்கி விட்டான் கண்ணன். அப்போது அர்ச்சுனன் ஓடிவந்து கண்ணன் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.

“எல்லாம் தெரிந்த மாயவன் நீ! உனக்கே இத்தகைய கோபம் வரலாமா? இந்த அகில உலகத்திலும் உனக்கு நிகரான எதிரி இல்லையே! வீட்டுமனையா உன் எதிரியாகக் கருதி இப்படித் துன்புறுத்துவது? இது உனக்குத்தகுமா? வேண்டாம். இம்முதியவனை விட்டுவிடு” -என்று அர்ச்சுனன் கெஞ்சினான். வீட்டுமனும் கண்ணன் திருவடிகளை நோக்கித் தன்கைகளை குவித்தான். பலவாறு கண்ணனைப் புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினான். நீண்ட நேர வேண்டுகோளுக்குப் பிறகு கண்ணனுக்கு வீட்டுமன் மேல் இரக்கம் உண்டாயிற்று! சக்கராயுதத்தை அவன் கழுத்திலிருந்து எடுத்தான். வீட்டுமன் விடுதலை பெற்றான். உயிர் பிழைத்தான்.

“கண்ணா! இனி நீ தேரில் ஏறிக்கொண்டு செலுத்து! என் கடமையை நான் செய்கிறேன். என்னை எதிர்ப்பவர்களை இன்று நடுப்பகலுக்குள் நமனுலகுக்கு அனுப்புகிறேன்” -என்று அர்ச்சுனன் கண்ணனை அழைத்தான். கண்ணன் தேரில் ஏறிச் சாரத்தியத்தை மேற்கொண்டு செலுத்தினான். அர்ச்சுனன் தேர்த்தட்டில் ஏறி நின்று கடுமையான போரை