பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/382

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
380
அறத்தின் குரல்
 

மேற்கொண்டான். அன்று செய்த அந்தப் போரைப் போல் அவ்வளவு ஆத்திரத்துடனே அர்ச்சுனன் அதற்கு முன்பு போரே செய்ததில்லை எதிர் தரப்புப் படையினரில் வீட்டுமன் தவிர அர்ச்சுனனை எதிர்த்த வேறெவரும் உயிருடன் பிழைக்க முடியவில்லை. வருணன், வாயு, அக்கினி, இந்திரன் முதலிய திசைப் பாலகர்களை வழிபடு தெய்வங்களாகக் கொண்ட படை அணிகள் பல அழிந்து விட்டன. துரியோதனாதியர் படையைச் சேர்ந்த யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் அநேகம் அழிந்து விட்டன. துரியோதனன் மாடி வீட்டுக்கு இடையில் காவலின் நடுவே இருந்தான். அவன் தரப்பைச் சேர்ந்த மற்ற அரசர்கள் அர்ச்சுனனை எதிர்த்து நிற்க முடியாமல் மூலைக்கு மூலை சிதறி ஓடிவிட்டார்கள். சுளத்தில் அர்ச்சுனனுக்கு எதிரே வீட்டுமன் ஒருவனைத் தவிர வேறு ஆள் இல்லை. இரண்டு பொழுது சாய்ந்தபின் வேறு வழியில்லாமையால் அர்ச்சுனன் போரை நிறுத்தினான். மூன்றாம் நாட் போர் இவ்வளவில் முடிந்தது. பழையபடி கருட வியூகத்திலும் அர்த்த சந்திர வியூகத்திலுமாகப் படைகள் நிறுத்தப்பட்டபின் இரு சாராரும் நான்காம் நாள் போரைத் தொடங்கினர்.

யானைப் படையினர் வீமனைத் தனியே வளைத்துக் கொண்டு தாக்கலாயினர். வீமனும் விடவில்லை. யானைகளையும் அவற்றின் மேல் வீற்றிருந்தவர்களையும் அடித்துப் புடைத்து அழித்தான். ஒருமுறை வீமனின் தாக்குதலைத் தாங்க முடியாமல் பின்வாங்கி ஓடிய யானைப் படையைத் துரியோதனன் தலைமை தாங்கி முன்னுக்கு இழுத்து வந்தான். இதனால் துரியோதனனுக்கும் வீமனுக்கும் தனித்தனியே நேருக்குநேர் போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அம்புமாரி பெய்து கொண்டனர். ஈசல் புற்று நுனியில் மொய்த்துக் கொண்டிருப்பது போல் துரியோதனன் மார்பில் நூற்றுக்கணக்கான அம்புகள் மொய்த்துப் பாய்ந்திருந்தன, துரியோதனன் வீமன் மேற் செலுத்திய அம்புகளில் பெரும் பாலானவற்றை அவன்