பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

அறத்தின் குரல்

பகதத்தனும் அசுரனே. ஆனால் கடோற்கசனிடமிருந்த அந்தச் சாமர்த்தியம் பகதத்தனிடம் இல்லை. சீக்கிரமே பகதத்தனுக்குத் தோல்வியும் கடோற்கசனுக்கு வெற்றியுமாக அன்றையப்போர் முடிந்தது. நான்காம் நாள் போரில் தன் புதல்வர்களில் ஓர் ஐந்து பேர்கள் வீமன் கையால் இறந்து போனார்கள் என்பதை அறிந்து அரண்மனையிலிருந்த காந்தாரி சோகம் தாங்காது அழுது புலம்பினாள்.

“பாண்டவர்கள் ஐவரும் இறப்பதற்குப் பதிலாக நீங்கள் நூற்றுவரில் ஐவர் இறந்து போனீர்களே! உங்கள் நல்வாழ்வு கண்டு பொறாமல் அந்தப் பாண்டவர்கள் எண்ணிய பொறாமை எண்ணங்கள் இன்று பலித்து விட்டனவே? இதுவோ உங்கள் விதி?” இவ்வாறு காந்தாரி வெகு நேரம் தன் கதறலை நிறுத்தவே இல்லை. இராம இராவண யுத்தத்தில் இருதரப்படைகளும் நின்றாற்போல் நின்று அணிவகுத்துப் பேரொலிகளுடனும் பேராவாரங்களுடனும், ஐந்தாம் நாள் காலை போர் தொடங்கியது. தேர்ப்பாகனான கண்ணன் அவசர அவசரமாகக் களத்தில் புகுந்து தேரைச் செலுத்த அர்ச்சுனன் வில்லும் கையுமாகப் போருக்குத் தேரில் ஏறினான். அர்ச்சுனன் வீட்டுமனோடு போர் செய்ய வேண்டுமென்பது கண்ணனின் ஆசை. அதற்காக வீட்டுமனுடைய தேருக்கு முன்னால் அர்ச்சனுடைய தேரைப் போருக்கேற்ற முறையில் கொண்டு போய் நிறுத்தினான். இதற்குள் கலிங்கவேந்தனைச் சேர்ந்த படை மக்கள் அர்ச்சுனனை நடுவில் மடக்கிக் கொண்டார்கள். வீட்டுமனை அவன் தாக்குவதற்கு முன்பே அவனை மடக்கிக் கொள்ள வேண்டும் என்பதே கலிங்கர்களின் நோக்கம். அர்ச்சுனன் அவர்களைத் தன் அம்புகளால் துளைத்தான். கலிங்கர்கள் பலர் மடிந்தனர். இதைக் கண்டு வீட்டுமன் தானாகவே அர்ச்சுனனோடு போருக்கு வந்தான். வீட்டுமனுக்கும் அர்ச்சுனனுக்கும் நேரடியாகவே போர் தொடங்கி விட்டது. சரியாக இதே நேரத்தில் போர்க்களத்தில் மற்றோர் பகுதியில் தனியே நின்று கொண்டிருந்த வீமனை எதிரி அரசர்கள் பலர்