பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/388

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் பரிசீலிக்கப்பட்டது.
386
அறத்தின் குரல்
 

சகுனியும் சல்லியனுமாகச் சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்துத் தாக்கினார்கள். ஆனால் சீக்கிரமே வீமனுடைய வில்லுக்கு முன் நிற்க இயலாதவர்களாகித் தோற்று ஓடினர். கண்ணனைத் தேர்ப்பாகனாகக் கொண்ட அர்ச்சுனனுக்கும் வீட்டுமனுக்கும் விற்போர் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. வீட்டுமன் எய்த அம்புகளை ஒன்றுகூடத்தன்மேல் விழாமல் அர்ச்சுனன் தடுத்தான்! அர்ச்சுனன் எய்த அம்புகளை ஒன்றுகூடத் தன்மேல் விழாமல் வீட்டுமனும் தடுத்தான்! ஒருவர் அம்பு மற்றவரைப் பாதிக்காமலே நீண்ட நேரம் இருவரும் சாதுரியமாகப் போரைச் செய்து கொண்டிருந்தனர். முருகக் கடவுளும், தாரகாசுரனும், இந்திரனும், பலாசுரனும், இராமனும், இராவணனும் முறையே தங்களுக்குள் செய்த போரைப் போலச் சிறப்பாக வீட்டுமனும் அர்ச்சுனனும் போர் செய்தார்கள். முடிவில் இருபுறத்துப் படைகளிலும் சரிசமமான அளவில் அழிவு ஏற்பட்டிருந்தது. பெருவாரியான வேந்தர்கள் உடலில் காயமுற்றிருந்தார்கள். எட்டாம்நாட் காலை போர் தொடங்குகிற போது பாண்டவர்கள் சகடவியூகமாகப் படையை அணிவகுத்து நிறுத்தினர். துரியோதனாதியர் படையை வீட்டுமன் தூசி வரிசையாக அணிவகுத்து நிறுத்தினான். போர் தொடங்குவதற்கு முன்பே தனக்குள் “வீமனை அன்று எப்படியும் கொன்று தீர்த்துவிட வேண்டும்” -என்று ஒரு சபதம் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். எனவே தானும் தன் தம்பியர்களில் சிலருமாக ஒன்று கூடிக் கொண்டு வீமனை எதிர்ப்பதற்கு வந்து நின்றான். வீமனோ, “துரியோதனனின் தம்பிமார்களில் முன்பு ஐந்து பேர்களைக் கொன்றது போல இன்றைக்கு ஒரு ஏழெட்டுப் பேர்களையாவது கொன்றுவிட வேண்டும்” -என்று தனக்குள் உறுதி செய்து கொண்டிருந்தான். துரியோதனன் கோஷ்டிக்கும் அவனுக்கும் போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. வீமன் தன் எண்ணப்படியே துரியோதனன் தம்பியர்களை ஒவ்வொருவராகத் தீர்த்துக் கட்டுவதற்குத்