பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

387

 தொடங்கினான், முன்பு இறந்திருந்த ஐந்து பேர்களுக்கு மேலே வரிசையாக இன்று எட்டுப் பேர் இறந்திருந்தனர். பதின்மூன்று தம்பியர்களைப் பறி கொடுத்திருந்தான் துரியோதனன். மனம் உடைந்து போன துரியோதனன் நேரே வீட்டுமனிடம் போய்த் தன் மனத்திலுள்ளவைகளை எல்லாம் பிரலாபித்து அழுதான்.

“தோல்விமேல் தோல்வியாக நாமே தோற்றுக் கொண்டிருக்கிறோம். உங்களை நம்முடைய படையின் தலைவராக அமைத்தால் உடனே வெற்றி கிட்டிவிடும் என்று நினைத்தேன். என் நினைப்பு ஏமாந்து விட்டது! முன்பு ஐந்து தம்பிமார்களைச் சாகக் கொடுத்தேன். இன்று எட்டுத் தம்பிமார்களை வீமன் கொன்று விட்டான்! பதின்மூன்று தம்பிமார்களைச் சாகக் கொடுத்ததைத் தவிர நான் கண்ட பயன் வேறு என்ன? ஒன்றுமே இல்லையே?” -என்று வீட்டுமனுக்கு முன் நின்று பரிதாபமாகக் கூறினான். வீட்டுமன் என்ன செய்வான்? பாவம்! ஆறுதலாகச் சில வார்த்தைகளைக் கூறினான்:-

“துரியோதனா! போர் என்றால் இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ஏற்படுவது சகஜம்தான். பகைவர்கள் பக்கமே எல்லாச் சாவுகளும் ஏற்பட்டுவிடுமோ? ‘போர்’ -என்றால் இரண்டு பக்கமும் நஷ்டங்கள், அழிவுகள் எல்லாம் ஏற்படத்தான் ஏற்படும். செல்வர்கள் செல்வத்தைத் தருமம் செய்வதற்கும் தாமே அனுபவிப்பதற்கும் பயப்பட மாட்டார்கள். இல்லறத்தார்கள் விருந்தினர்கள் எப்பொழுது வந்தாலும் வரவேற்றுப் பேணுவதற்குப் பயப்பட மாட்டார்கள். மெய்யறிவு பெற்று இந்த உலகத்தைப் பற்றிய உண்மையைத் தெளிந்து கொண்டவர்கள் சாவதற்கும் பயப்படமாட்டார்கள். இவற்றை எல்லாம் போல அரசர்களாகப் பிறந்த வீரக்குடிமக்கள் போருக்குப் பயப்படக்கூடாது! ஆனால் உன்னைப் பொறுத்த மட்டில் நீ இம்மாதிரிப் பயப்படுவதைத் தடுக்க முடியாது. அன்றிலிருந்து இந்த விநாடி வரை எதிலும் எதற்கும் ஒழுங்கையும்