பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

37


அவனுடைய திகைப்பையும் வியப்பையும் போக்கு பவர் போல் ‘இந்தமன்’ என்னும் பெயரையுடைய அந்த முனிவர் ஆத்திரத்துடனே மொழியலானார்; ‘நானும் என் மனைவியும் ஆண்மானும் பெண்மானுமாக உருமாறி இன்பத்தில் ஈடுபட்டிருக்கும் போது என் மேல் அம்பு எய்து கொன்றாய் நீ! இந்தத் தகாத காரியத்தைச் செய்ததற்காக, ‘நீயும் உன் மனைவியை இன்பம் நாடி எப்போது தீண்டுகிறாயோ, அப்போதே இறந்து போவாய் இது என் சாபம்’ என்று இதைக் கூறியவுடன் கீழே விழுந்து இறந்து போனார் இந்தமன் முனிவர். பெண்மானாக உருமாறியிருந்த அவர் மனைவியும் சிறிது நேரத்திற்கெல்லாம் கணவன் பிரிவைப் பொறுக்காமல் காட்டுத் தீயிலே பாய்ந்து உயிர் துறந்தாள். சாபம் பெற்ற பின்பு தான் பாண்டுவுக்குத் தன் குற்றமும் அதில் நிறைந்திருந்த தீமையும் புலப்பட்டன. அவன் தன்னை உணர்ந்தான். ‘செய்த பாவம் எவ்வளவு பெரியது?’ என்பதையும் உணர்ந்தான். இந்தப் பாவத்திற்கு எப்படியாவது பரிகாரம் தேடியாகவேண்டும் என்று அவனுடைய மனச்சான்று அவனை வதைத்தது. தனக்கு மெய்யுணர்வைத் தோற்றுவித்தது அந்தச் சாபமேயாகையால் அது ஏற்பட்டதும் ஒரு வகையிலே நல்லதாகவே தோன்றியது அவனுக்கு. தன் பாவத்துக்குப் பரிகாரமாக, அரசாட்சி, அந்தஸ்து, படைத்தலைமைப் பதவி முதலிய எல்லாவற்றையும் துறந்து மனைவியரோடு வனத்திலேயே தங்கித் தவத்துறையில் ஈடுபடக் கருதினான். அதன்படியே செய்தான்!

படையை அடக்கி நடத்திய பாண்டு இப்போது தவத்திற்காகப் புலன்களை அடக்கி நடத்தப் பழகினான். அரசாட்சியின் ஒரு பிரிவில் தலைமை பூண்டிருந்தவன் இப்போது ஞானத்திற்குத் தலைமை பூண்டவனாயினன். அவனுடைய தவம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெருகிச் சிறந்து வந்தது. இடையே, ‘மக்கட்பேறில்லாமையினாலே தன் வாழ்வு பயனற்றதாகி விடுமோ?’ - என்ற கவலையும் ஒரு நாள் அவனுக்கு ஏற்பட்டது! திருதராட்டிரனுடைய மனைவியாகிய காந்தாரி