பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

அறத்தின் குரல்

அர்ச்சுனனிடம், கண்ணன் சூசகமாகச் சொல்லி விட்டான். “அர்ச்சுனா! இன்றைக்குத்தான் வீட்டுமனுக்கு மோக்ஷ பதவி அளிக்கவேண்டிய நாள். மறந்து விடாதே” என்று கண்ணன் கூறியிருந்தான்.

“கண்ணா! என் அஞ்ஞானத்தை அகற்றி எனக்கு உறுதியை உபதேசித்தவன் நீ. நீ இடுகிற கட்டளையை நிறைவேற்றுவதற்கு எந்த நேரமும் இந்தக் கைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக வில்லெடுக்க வேண்டுமென்று நீ சொன்னால் நான் அப்படியே செய்வேன்” என்று கூறிக் கண்ணனை வணங்கினான் அர்ச்சுனன். சரியாக இதே சமயத்திற்கு விட்டுமன் வில்லும் கையுமாக அர்ச்சுனனுக்கு எதிரே போருக்கு வந்து நின்றான். இருவருக்கும் போர் தொடங்கியது. அர்ச்சுனன் அருகிலிருந்த அரசர்கள் வேகமாக வீட்டுமன் மேல் நிறைய அம்புகளைச் செலுத்தி விட்டார்கள். முள்ளம் பன்றியின் உடலில் சிலிர்த்து நிற்பதைப் போல் வீட்டுமன் உடலெங்கும் அம்புகள் தைத்துச் சிலிர்த்து நின்றன. திடீரென்று ஆவேசமுற்ற வீட்டுமன் எல்லா அம்புகளையும் உதறிவிட்டு எதிர்த்தரப்பில் இருந்த அரசர்களை வன்மையாகத் தாக்கத் தொடங்கினான், அரசர்கள் வீட்டுமனுக்கு எதிரே நின்று போர் செய்ய முடியாமல் மிரண்டு ஓடினார்கள். இதைக் கண்ட அர்ச்சுனன் வீட்டுமனோடு போர் செய்வதற்காகத் தானே நேருக்கு நேர் வில்லை வளைத்துக் கொண்டு வந்து நின்றான். வீட்டுமனுக்குத் துணையாக அசுவத்தாமன், கிருபாச்சாரியார், துரோணர், சகுனி, சயத்திரதன், பகதத்தன் முதலியவர்களை அனுப்பியிருந்தான் துரியோதனன். இவர்கள் எல்லோருமாக ஒன்று கூடிக்கொண்டு தனியே நின்ற அர்ச்சுனனை வளைத்துக் கொண்டார்கள். அர்ச்சுனனும் சும்மா விட்டுவிடவில்லை. தன்னுடைய ஒரே ஒரு வில்லினால் இவர்கள் இத்தனை பேருடைய வில்லுக்கும் ஈடு கொடுத்துப் பதில் சொல்லிக் கொண்டுதான் இருந்தான். இரண்டு கையாலுமே விற்போர் செய்தான் அர்ச்சுனன். அர்ச்சுனன்