பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/399

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
397
 

அர்ச்சுனனை மாத்திரம் புண்படுத்த வில்லை. தேர்ப்பாகனாக வீற்றிருந்து தேரைச் செலுத்திய கண்ணன் மேலும் அம்புகள் தைத்தன. இவ்வாறு சமாளிக்க முடியாத வேகத்தோடு வீட்டுமன் போரிடுவதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டும் தந்திரமாகச் சிகண்டியை வரவழைத்து எதிரே நிறுத்தினான். சிகண்டியைக் கண்டதும் உடனே வீட்டுமன் போரை நிறுத்தி விட்டு நின்றான்.

“இது தான் நல்ல சமயம்! இப்போது அவர்மேல் அம்புகளை ஏவி வில்லை ஒடித்துவிடு... உடனே செய்..” என்று கண்ணன் அர்ச்சுனனைத் துரிதப்படுத்தினான். அர்ச்சுனன் உடனே வில்லைத் துளைக்கும் வேகத்தில் வீட்டுமனை நோக்கி அம்புகளைச் செலுத்தினான். வீட்டுமனுடைய வில் இரண்டாக ஒடிந்து கீழே விழுந்தது. அவன் வெறுங்கையனாகத் தேரின் மேலே நின்றான். சிகண்டியும் அருச்சுனனுமாக மாறி மாறி அம்புகளைத் தொடுத்தனர். வீட்டுமனுடைய உடலில் அம்புகள் துளைத்து மொய்த்தன. இரத்தம் தேர்த்தட்டுகளில் வடிந்து ஒழுகியது. சிறிது நேரத்தில் உடல் தளர்ந்து சோர்வோடு கீழே விழுந்தான் வீட்டுமன். அந்த வேதனையும் வலியும் மிகுந்த நிலைமையிலும் கூட அவனுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. “தாம் தளர்ந்து விழுவதற்குக் காரணமாக ஏவப்பட்ட அம்புகளில் பெரும்பாலானவை அர்ச்சுனனுடையவை” என்ற எண்ணமே அவனைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அப்போது துரியோதனனின் தம்பிமார்கள் கீழே விழுந்த அவனைத் தூக்குவதற்கு ஓடி வந்தனர்.

“வேண்டாம்! வேண்டாம்! என்னைத் தூக்காதீர்கள்.. இப்படியே விட்டுவிடுங்கள். இனி நான் மீண்டும் இந்தப் பிறவியில் உயிரோடு எழுந்திருந்து போர் செய்யப் போவதில்லை. மகா வீரனான அர்ச்சுனனுடைய அம்புகளால் நான் வீழ நேர்ந்ததே என்று எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நீங்கள் என்னைச் சுற்றி நிற்க வேண்டாம். போய் உங்கள் அண்ணன் துரியோதனனோடு சேர்ந்து பாண்டவர்களை