பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துரோண பருவம்

1. பதினொன்றாவது நாளில்

இருதிறத்துப் படைகளும் ஆவலோடு தன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதினோராவது நாள் ஒளி உதயத்தோடு தோன்றியது. பாண்டவர் படைகளும் கௌரவர் படைகளும் அன்றைய யுத்தத்திற்கு மகிழ்ச்சியோடு தயாராயின. “அர்ச்சுனா! இன்றையப் போரில் நமக்கு அவனை மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயம் ஒன்றிருக்கிறது. எதிர்த்தரப்பில் துரோணர் தான் படைத்தலைவர். வலிமைக்கெல்லாம் மூலாதாரமாக நின்ற வீட்டுமன் வீழ்ச்சி அடைந்து விட்டான். வெற்றி நம் பக்கம் தான் என்பதைப் பற்றி இனி நாம் கவலைப்பட வேண்டியதே இல்லை” என்று போருக்குப் புறப்படுகையிலே கண்ணன் அர்ச்சுனனிடம் கூறினான். இருதிறத்துப் படைகளும் நேர் எதிரெதிரே போருக்குத் தயாராக நின்றன. வீட்டுமன் தலைமை வகிக்காத கெளரவ சேனை களையிழந்து ஒளியிழந்து காணப்பட்டது. சந்திரனே உதிக்காத ஆகாயம், மணமே இல்லாத மலர், நாதத்தை எழுப்பும் நரம்புகளே இல்லாத வீணை, நதிகளோ, ஆறுகளோ பாயாத வறண்ட நாடு, உயர்ந்த எண்ணங்கள் இல்லாத கீழோனின் மனம், வேத விதியை மீறிய அக்கிரமமான வேள்விகள் இவற்றைப் போல பொலிவிழந்து காணப்பட்டது துரியோதனாதியர் படை. அந்தப் படையின் எல்லாவிதமான பொலிவுகளுக்கும் காரணஸ்தனாக இருந்தவன் தான் மரணப்படுக்கையில் கிடக்கிறானே? புதிய படைத் தலைவரான துரோணர் கௌரவ சேனையைச் ‘சகடம்’ போன்ற வியூகத்தில் அணி வகுத்து நிறுத்தினார். திண்மையும் வலிமையும் வாய்ந்த பாண்டவ சேனையை அன்றில் பறவையைப் போன்ற வியூகத்தில் வகுத்து நிறுத்தினான் துட்டத்துய்ம்மன். படைத்தலைவர்கள் ஆணையும் அனுமதியும் பிறப்பித்தனர். அவ்வளவில் போர்