பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

29


அவள் முன்பு தோன்றினான். அவளுக்கு அருள் செய்த பின் தருமன் விடை பெற்றுச் சென்றான். உரிய காலத்தில் குந்தி கருக்கொண்டாள். கருமுற்றிப் பிறந்த புதல்வனே தருமபுத்திரன். ‘உலகையெல்லாம் தன் நேரிய ஆட்சி வன்மையினால் செங்கோல் நெறியிலே செலுத்தி ஆளவல்ல மன்னர் மன்னன் இவன்!’ - என்று கண்டவுடன் சொல்லும்படி விளங்கினான் இளந் தருமபுத்திரன். அவனிடம் அவ்வளவு தேஜஸ் நிறைந்து விளங்கியது! ‘குந்திக்கு இத்தகைய புதல்வன் பிறந்திருக்கிறான்’ என்ற செய்தியைக் கருக்கொண்டிருந்த காந்தாரி கேட்டாள். அளவுக்கதிகமான பொறாமை பயங்கரமானது. காரணமின்றிப் பிறரைப் பற்றி மனங் கொதித்தால் தனக்கே துன்பத்தை அடைய வேண்டியதுதான்.

இடைவிடாத பொறாமையினால் காந்தாரியின் கருச்சி சிதைந்து வெளிப்பட்டது. இதைக் கண்டு என்ன செய்வதென்றறியாமல் பலரும் அஞ்சியிருக்கும்போது வியாசர் வந்தார். சிதைந்த கருவை நூறு தாழிகளில் தனித்தனியே பிரித்து அடைத்துவிட்டு, ‘இவைகள் தாமாகவே முற்றிக் குழந்தைகளாக வெளிப்பட்டால் ஒழிய இடையே எவரும் தீண்டலாகாது! - என்று கூறிச் சென்றார் அவர். அதன்படியே தாழிகளைத் தீண்டாமல் தொலைவிலிருந்து குழந்தைகள் வெளிப்படும் நாளை அடைக்காக்கும் பாம்பைப் போல் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள் காந்தாரி. இங்கே அத்தின புரியில் இவ்வாறிருக்கும்போது தபோ வனத்தில் பாண்டு மீண்டும் குந்தியை அழைத்து மக்கட் பேற்றுக்கு வற்புறுத்தினான். குந்தி துர்வாசர் கற்பித்த மந்திரத்தைக் கூறி வாயு தேவனை அழைத்தாள். வாயுதேவனின் நல்வருளால் வலிமையிலும் ஆற்றலிலும் நிகரற்றவனாகிய வீமன் தோன்றினான். குந்தியும் பாண்டுவும் மனமுவந்தனர்.

வீமன் பிறந்த சில நாட்களில் அத்தினபுரியில் வியாசர் வைத்துவிட்டுச் சென்ற கருப்பத் தாழிகளுள் முதல் தாழியிலிருந்து குழந்தை வெளிப்பட்டது. இந்தக் குழந்தையே துரியோதனன். இதன் பிறந்த நாட் போதில் நல்லவர்கள் கண்டு