பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

அறத்தின் குரல்

போரில் துரியோதனாதியர்கள் பெருமைப்படும்படியான நிகழ்ச்சியையோ, மகிழ்ச்சிக்குரிய செயல்களையோ, அவர்கள் படை செய்யவில்லை. போதாத குறைக்குத் தன் மகன் இலக்கண குமாரன் அபிமன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு அவமானத்திற்குள்ளானான் என்பதையும் அறிந்தபோது துரியோதனன் மனம் குமுறினான். போரில் நாளுக்கு நாள் பாண்டவர்கள் கை ஓங்கி வருகிறதென்பதை நினைக்கும் போதே அவன் மனம் அசூயையால் புழுங்கியது. பாண்டவர்களையும் அபிமன்னனையும் பழிவாங்குவதற்காக ஏதாவது சூழ்ச்சி அகப்படாதா? என்று துறுதுறுத்துக் கொண்டிருந்தது அவன் மனம். அன்றிரவு முழுவதும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. வஞ்சக எண்ணங்கள் அந்த அசூயை நிறைந்த மனம் முழுவதும் அலைமோதிச் சிதறிக் கொண்டிருந்தன. படையில் முக்கியமாகப் பங்கு கொண்டவர்களை எல்லாம் அழைத்து மறுநாள் செய்ய வேண்டிய சூழ்ச்சிகளைப் பற்றி அந்த நள்ளிரவில் சிந்தித்தான். படைத் தலைவராகிய துரோணரும் அப்போது அங்கே உடனிருந்தார்.

“துரோணரே! இன்றைய போரில் என் மகனை அபிமன்னன் அவமானப்படுத்திவிட்டான். என் மனத்திலிருந்து என்றென்றைக்கும் இந்த அவமானம் மறக்கவே மறக்காது. இதற்கு நாம் பழிவாங்கியே தீரவேண்டும். நாளைய தினமே அந்தப் பழியை நிறைவேற்றிக் கொள்ள உங்கள் உதவி தேவை. இன்று என் மகனைச் சிறைப்பிடிப்பதற்கு பதிலாக நாளைக்குப் படைத்தலைவர்களுள் முதல்வனாகிய தருமனையே நாம் சிறை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் என் மனத்திலுள்ள ஆத்திரம் தீரும்” என்றான் துரியோதனன். துரோணர் சிந்தனையில் ஆழ்ந்தார். துரியோதன்னுடைய எண்ணம் அசாத்தியமானதாக மட்டும் அன்று; அநாவசியமாகவும் தோன்றியது அவருக்கு.

“என்ன துரோணரே! ஏன் தயங்குகிறீர்? நான் கூறியபடி செய்ய முடியாதா?” துரியோதனன் கேட்டான்.