பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

411

வற்றையும் விவரித்துக் கூறி விட்டான் தருமன். “நாளைக்குப் பன்னிரண்டாம் நாள் போரில் அவர்கள் சதித்திட்டத்தை வெற்றிகரமாக முறியடிப்போம்! பாவம்! கெளரவர்கள் ஏமாந்து போகப் போகிறார்கள்” - பாண்டவர்கள் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வேரறுப்பதற்குத் திட்டமிட்டு விட்டார்கள். பன்னிரண்டாம் நாள் பொழுது புலர்ந்தது. பாண்டவர்கள் தங்கள் படையை அன்று அணிவகுத்து நிறுத்திய விதம் முற்றிலும் புதுமாதிரியானதாக இருந்தது. தருமனை நடுவில் நிறுத்தி அவனைச் சுற்றிலும் வளையம் வளையமாக மண்டலமிட்டுப் படைகளை நிறுத்தினார்கள். தருமனுக்கு முன்புறம் அர்ச்சுனனும் அபிமன்னனும் நின்றார்கள். பின்புறம் வீமன் நின்றான். மற்ற இருபக்கங்களிலும் நகுல சகாதேவர்கள் ஆயுத பாணிகளாய் நின்றனர். இந்த மண்டல வியூகத்தையும் தருமன் நடுவில் நிற்பதையும் கண்டபோது சபதம் செய்த திரிகர்த்தன் முதலியவர்கள் திடுக்கிட்டுப் போயினர். கெளரவ சேனை கருடவியூகத்தில் வகுத்து நிறுத்தப்பட்டது. திரிகர்த்தன் முதலிய அரசர்கள் நேற்றிரவு செய்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக அர்ச்சுனனையும் வீமனையும் சண்டைக்கு இழுக்கிற பாவனையில் தனியே பிரித்துக் கொண்டு போக முயன்றனர். முதலில் அவர்கள் அழைப்பை அர்ச்சுனன் மட்டும் ஏற்றுக் கொண்டான். முன்புறத்தில் தருமனுக்குச் சரியான பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டுத் திரிகர்த்தனோடு போருக்குச் சென்றான். அவ்வாறு செல்லும்போதும் தருமனுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டுதான் சென்றான். மற்றவர்கள் முன் போன்றே தருமனை மண்டலமிட்டுக் கொண்டு நின்றார்கள். அர்ச்சுனனுக்கும், திரிகர்த்தன் முதலியவர்களுக்கும் போர் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே துரோணர் பல அரசர்கள் புடைசூழத் தருமனைத் தாக்குவதற்கு வந்தார். துரோணரோடு சயத்திரதன், சகுனி, குண்டலன் ஆகிய அரசர்கள் வந்தனர். இவர்களைத் தவிர, தருமனைச் சுற்றிக் காவல் புரிந்து கொண்டிருக்கும் மண்டலத்தைக் கலைப்பதற்