பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/415

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
413
 

போர்க்களத்தில் அவமானப்படுத்தினேன் என்ற பழியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இப்போது நீங்கள் மிகவும் களைத்து விட்டீர்கள். போய் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் போதுமான ஆயுதங்களோடும், போதுமான படைகளோடும் போருக்கு வந்து சேருங்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

அவன் கூறியபடியே துரோணரும் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் திரும்பவும் படைகளுடனும் ஆயுதங்களுடனும் தருமனோடு போருக்கு வந்தார். இம்முறை தருமனுக்குத் துணையாக வேறு சில அரசர்களும் சேர்ந்து கொண்டிருந்தனர். இதனால் எதிர்ப்பைச் சமாளிப்பது துரோணருக்குக் கடினமாயிற்று. விராடராசன், துட்டத்துய்ம்மன், குந்திபோஜன் முதலியவர்கள் தருமனுக்குப் பக்கபலமாக நின்றார்கள். துரோணர் திணறுவதைக் கண்டு துரியோதனன், கர்ணன், சகுனி, சோமதத்தன் முதலிய கெளரவப் படைவீரர்கள் அவனருகில் துணையாக வந்து நின்று கொண்டார்கள். இரு தரப்பாருக்கும் கடுமையான போர் நடந்தது. துட்டத்துய்ம்மன் முதலியவர்களின் சாமர்த்தியத்தினால் கௌரவர் படைக்கே அதிகமான சேதம் ஏற்பட்டது. துரோணர் முதலிய பெரிய பெரிய வீரர்கள் முன்னணியில் நின்றும் கூட இந்த அழிவைத் தவிர்க்க முடியவில்லை. “வெட்கமில்லாமல் இன்னும் நீங்கள் போர் புரிகிறீர்களே! உங்கள் படை அழிந்து ஒழிந்து போன பிறகும் உங்களுக்கு ஓடிப்போக மனம் வரவில்லையா?” என்று பாண்டவர் படை கெளரவப் படையை நோக்கி ஏசியது.

“நாங்கள் என்ன செய்வது? உங்கள் பக்கத்து அரசர்களின் வலிமைக்கு முன்னால் நாங்கள் எது செய்தாலும் வெற்றி பெற மாட்டேன் என்கிறதே?” என்று கெளரவ வீரர் இந்த ஏச்சுக்கு மறுமொழி கூறினர். இப்போது இரண்டாவது முறையாகத் துரோணர் தோற்றுப் பின் வாங்கினார். தருமனைச் சிறைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டு முறை படுதோல்வி அடைந்து விட்டது. வீமன், கடோற்கசன்