பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

417

நெருங்குவதற்கு முன்பே அவன் அம்பு ஒன்று அதைத் தடுத்து நிறுத்திக் கீழே தள்ளியது. பகதத்தனுக்கு ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றம்! எப்படியாவது அர்ச்சுனனைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று குமுறியது உள்ளம். பல்லாண்டுகளாகத் திருமாலை நோக்கித் தவம் செய்து பெற்ற வேல் ஒன்று அவனிடம் இருந்தது. அந்த வேலை எறிந்தால் அது அர்ச்சுனனை அழிப்பது உறுதி. பகதத்தன் திருமால் தனக்கு அளித்த அந்தக் கூரிய வேலாயுதத்தை எடுத்து அர்ச்சுனனை நோக்கி வீசினான், பாவம்! அதைத் தனக்கு அளித்தவராகிய திருமாலே எதிர்ப்புறம் கண்ணன் என்ற பெயரில் மறைந்து தேரோட்டிக் கொண்டிருப்பதைப் பகதத்தன் அறிய மாட்டான். ஒரே ஒரு விநாடி அர்ச்சுனனுடைய தேர்த்தட்டில் கண்ணனுடைய உருவம் மறைந்தது. சங்கு சக்ரதாரியாக மகாவிஷ்ணு தோன்றினார். அவருடைய கைகள் வேகமாக எதையோ ஏந்தித் தாங்கும் பாவனையில் முன்புறம் நீண்டன. பகதத்தன் ஏவிய வேல் அர்ச்சுனனை அடையவில்லை, திருமாலின் நீட்டிய கைகளில் போய் விழுந்தது. என்ன ஆச்சரியம்! அவருடைய கையில் விழுந்தவுடன் அந்த வேல் ஓர் அழகிய மணி மாலையாக மாறியது. அதை அவர் தம் மார்பில் அணிந்து கொண்டார். அடுத்த விநாடி கண்ணனுடைய உருவமே மீண்டும் தோன்றியது. பகதத்தனுக்கு இங்கு நடைபெற்ற இந்த மாயம் ஒன்றுமே புரியவில்லை.

“தான் ஏவிய வேல் அர்ச்சுனனை ஒன்றும் செய்ய வில்லை” என்பது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. அவன் திகைத்துப் போய் வெறுங்கையோடு அர்ச்சுனனைப் பார்த்தவாறே நின்றான். “அர்ச்சுனா! இவனைத் தொலைப்பதற்கு இதுதான் சரியான சமயம்! குறி வைத்து இவன் மார்பில் ஓர் அக்கினிக் கணையைச் செலுத்து...” என்று கண்ணன் அர்ச்சுனனின் காதருகில் இரகசியமாகக் கூறினான். உடனே அர்ச்சுனன் மனம், மொழி, மெய்களால் கண்ணனைத் தியானம் செய்து கொண்டே ஓர் அக்கினி அஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துப் பகதத்தன் மேல்

அ.கு. -27