பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அறத்தின் குரல்


மனம் வருந்தும்படியான பல தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. பின்பு சில நாட்களில் தொடர்ந்து வரிசையாகத் தொண்ணூற்றொன்பது தாழிகளிலிருந்தும் துச்சாதனன் முதலியவர்கள் பிறந்தார்கள். இறுதியாகத் ‘துச்சனை’ என்னும் பெண்ணொருத்தியும் பிறந்தாள். புதல்வர்கள் நூற்றுவராலும் பெண் ஒருத்தியாலும் திருதராட்டிரனும் காந்தாரியும் இறும்பூதடைந்து மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். மூன்றாவதாக மீண்டும் பாண்டு விரும்பியபடியே குந்தி இந்திரனை அழைத்து அவனருளால் அருச்சுனனைப் பெற்றாள். பிறந்த காலத்தில் பங்குனன் என்னும் பெயர் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. தன் மனைவியரில் குந்திக்கு மக்கள் மூவர் பிறந்திருந்தும் மாத்திரி மக்களின்றி வருந்துவதைக் கண்டு பாண்டு, “குந்தி! உனக்கு துர்வாசர் கற்பித்த மந்திரத்தை நீ மாத்திரிக்கும் கற்பித்து அவளும் மக்கட்பேறு அடையுமாறு செய்!” என்று அன்புடன் குந்தியை வேண்டிக் கொண்டான்.

கணவனுடைய வேண்டுகோள்படி துர்வாசர் தனக்களித்த மந்திரத்தை மாத்திரிக்குக் கூறினாள் குந்தி. அந்த மந்திரத்தைக் கொண்டு கதிரவன் புதல்வராகிய அசுவினி தேவர்கள் இருவரையும் தனித்தனியே இருமுறை அழைத்து அவர்களருளால் நகுல, சகாதேவர்களைப் பெற்றாள் மாத்திரி. புதல்வர்கள் ஐவரை அடைந்த பாண்டு தான் செய்து வந்து தவத்திற்கே பயனைப் பெற்றவன் போல உள்ளம் உவந்தான். பாண்டு, குந்தி, மாத்திரி ஆகியவர்கள் மனத்தில் மகிழ்ச்சி வளர்ந்ததைப் போலவே பாண்டவர்கள் ஐவரும் வளருங் குருத்து எனக் கொழித்து வளர்ந்து வந்தனர். தக்க பருவத்தில் முனிவர்களைக் கொண்டு குடுமி களைமங்கலமும் முந்நூல் மங்கலமும் செய்வித்துப் புதல்வர்களைக் கலைப் பயிற்சி மேற்கொள்வதற்கேற்றவர்களாக்கினான். தபோவனத்து வாழ்க்கையின் இனிய சூழ்நிலையில் முனிவர்களாகிய ஆசிரியர்கள் கற்பித்த பலவகைக் கலைகளிலும் தேர்ந்து திகழ்ந்தனர் பாண்டவர்.