பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

423

அவைகளைத் தெளிவாகக் கூறி விளக்கினான். இந்த விளக்கம் பாண்டவர்களுக்கு ஒரு நல்ல முன்னெச்சரிக்கையாக அமைந்து விட்டது. உரிய நேரத்தில் இருதிறத்தாருக்கும் போர் தொடங்கிற்று. யானை, குதிரை காலாள் தேர் என்னும் நால்வகைப் பெரும் படைகளோடு சஞ்சத்தகர்கள் என்ற பெரு வீரர்களைப் பாண்டவர்கள் மேல் ஏவினான் துரியோதனன். அவனால் ஏவப்பட்ட அவ்வீரர்கள் அர்ச்சுனனை வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கினர். அர்ச்சுனன் அம்புகளை ஏவி அவர்களை வரவேற்றான். மிகச் சில கணங்களுக்குள்ளேயே வீரத்திலும் ஆற்றலிலும் வல்லவர்களான அந்தப் படையினரை நம்பிக்கை தளர்ந்து போகும்படி செய்துவிட்டான் அர்ச்சுனன். அவர்களில் பலர் களத்திலேயே மாண்டனர். சிலர் கொடியும், தேரும், வில்லும், அம்பும் இழந்து வெறுங்கையர்களாய் ஓடினர். எவற்றை இழந்தாலும் உயிரை இழக்க விரும்பாத சிலர் தாமாகவே தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள், இறுதியில் அர்ச்சுனன் நின்றான், அவனுடன் அந்த வில் நின்றது. அந்த வில்லோடு வெற்றியும் நின்றது. எதிரிகள் நின்ற இடம் காலியாக இருந்தது. அந்தக் காலியிடத்தில் தோல்வி சூனிய ரூபத்தில் மானஸீகமாகக் குடிகொண்டிருப்பது போலத் தோன்றியது.

சஞ்சத்தகர்களின் படைக்கும் அர்ச்சுனனுக்கும் நிகழ்ந்த போரின் முடிவுதான் இப்படி ஆயிற்று போர்க்களத்தின் மற்றப் பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருந்த பிற நிகழ்ச்சிகளைக் காண்போம். வேறோர் புறத்தில் விற்கலையில் இளைஞனான துட்டத்துய்ம்மனும், முதுபெரும் வில்லாளனாகிய துரோணரும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். துட்டத்துய்ம்மனுக்கு வில்வித்தை கற்பித்த ஆசிரியரே துரோணர்தான், ‘போர்’ என்று வந்துவிட்டால் ஆசிரியர் மாணவர், உறவு முறைகளையா கவனித்துக் கொண்டிருக்க முடிகிறது? இருவர் வில்லிலிருந்தும் எதிரெதிரே அம்புகள் மோதிக் கொண்டன. விரைவிலேயே இளைஞனான