பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/426

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
424
அறத்தின் குரல்
 

துட்டத்துய்ம்மன் தளர்ந்து சோர்ந்து விட்டான். துரோணர் நிறுத்தாமல் அம்புகளை ஏவிக் கொண்டிருந்தார். அவருடைய அந்த இடைவிடாத தாக்குதலைத் தாங்க முடியாத துட்டத்துய்ம்மன் தேரிலிருந்து குதித்து ஓடத் தலைப்பட்டுவிட்டான். முதல் முதலாகப் பாண்டவர்கள் பக்கம் நேர்ந்த இந்தப் பெரிய தோல்வி மின்னல் தோன்றி மறையும் நேரத்தில் போர்க்களம் முழுவதும் பரவிவிட்டது. எங்கும் ஒரே கலவரமாகிவிட்டது. துட்டத்துய்ம்மன் தோற்று ஓடினான் என்ற செய்தியை நம்ப முடியாமல் திகைத்தனர் பாண்டவர் பக்கத்து ஆட்கள். “பாண்டவர் படைத் தலைவனான துட்டத்துய்ம்மனே தோற்று ஓடி விட்டானாம்!” என்று கைகொட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தனர் கெளரவர்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் தருமருக்குப் பகீரென்றது. அவன் துட்டத்துய்ம்மனைப் பார்த்து வருத்தமும் ஏமாற்றமும் தொனிக்கின்ற குரலில் கீழ்க் கண்டவாறு கேட்டான்: -

“துட்டத்துய்ம்மா! படைத்தலைவனாகிய நீதான் நம்முடைய எல்லா வெற்றிகளுக்கும் காரணஸ்தனாக இருக்க வேண்டியவன். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்போது இந்த மகத்தான தோல்விக்கும் நீயே காரணம் ஆகி விட்டாய்” தருமருடைய சொற்களைக் கேட்டுத் துட்டத்துய்ம்மன் தலைகுனிந்தான். நிலைமையைச் சமாளித்துப் பகைவர்களுடைய சக்கரவியூகத்தை உடைப்பதற்கு ஒரு சரியான ஆள் தேவையாயிருந்தது. தருமர் அபிமன்னனை அருகில் அழைத்தான். அபிமன்னன் அருகில் வந்து நின்றான்.

“அபிமன்னா! இப்போது உன்னால் ஓர் உதவி ஆக வேண்டியிருக்கிறது. மறுக்காமல் நீ அதைச் செய்ய வேண்டும்.”

“சொல்லுங்கள்! அது என் பாக்கியம்.”

“துரியோதனாதியர்கள் இப்போது சக்கரவியூகத்தில் நின்று கொண்டிருக்கின்றனர். உள்ளே புகுந்து போர் செய்து அந்த வியூகத்தை எவ்வாறாவது குலைக்க வேண்டும்."