பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

அறத்தின் குரல்

கலைத்தாக வேண்டும். ஒவ்வொரு ஆரத்தின் முன்னும் ஒரு பெரிய தலைவர் நின்று கொண்டிருந்ததனால் கலைப்பது மிகவும் கடினமான வேலையாகத்தான் இருந்தது முதல் ஆரத்தின் முதல் வீரராகத் துரோணர் வில்லுடன் நின்று கொண்டிருந்தார். அபிமன்னன் சிறிதும் தயங்காமல் அவரை எதிர்த்து விற்போர் புரியலானான். தொடக்கத்தில் பயமான இருந்தாலும் நேரம் ஆக ஆக அபிமன்னனுடைய துணிவும் தன்னம்பிக்கையும் பெருகி வளர்ந்தன. துரோணரை எப்படியும் வியூகத்திலிருந்து துரத்தியே தீருவது என்ற உறுதியோடு போர் செய்தான் அவன். அவனுடைய வில்லின் வேகம் விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. வயதானவராகிய துரோணர் எவ்வளவு நேரம்தான் அந்த வேகத்தைத் தாங்கமுடியும்? துரோணருடைய கைகள் ஓய்ந்து கொண்டே வந்தன. முடிவில் வில்லின் நாணை அறுத்துக் கீழே தள்ளினான் அபிமன்னன். அம்பறாத் தூணியையும் அறுத்து வீழ்த்தினான். வேறு வழியின்றிக் களத்தை விட்டு ஓடிப் போக வேண்டிய நிலை துரோணருக்கு ஏற்பட்டது. துரோணர் ஓடியதுமே முதல் ஆரம் முற்றிலும் கலைந்து விட்டது. முதல் ஆரம் கலைந்தவுடன் இரண்டாவது ஆரத்தைக் கலைப்பதற்காகச் சென்றான் அபிமன்னன். இரண்டாவது ஆரத்தின் முன்னணியில் முதல் வீரனாகத் துரோணருடைய புதல்வன் அசுவத்தாமன் நின்று கொண்டிருந்தான். அசுவத்தாமன் அப்போது அளவு கடந்த சினத்துடனும் ஆத்திரத்துடனும் இருந்தான். தன் தந்தையை அபிமன்னன் முறியடித்ததைக் கண்டு அவனுடைய மனம் மிகவும் புண்பட்டுப் போயிருந்தது. அந்த ஆத்திரம் முழுவதையும் அபிமன்னனோடு போர் செய்வதிற் காட்டினான் அவன். அசுவத்தாமனுக்கும், அபிமன்னனுக்கும் இரண்டாவது ஆரத்தில் போர் தொடங்கியது.