பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. ‘வியூகத்தின் நடுவே’

சக்கர வியூகத்தின் இரண்டாவது ஆரத்தில் அசுவத்தாமனை எதிர்த்து அபிமன்னன் செய்த போரில் சீக்கிரமே அசுவத்தாமன் கை ஓய்ந்துவிட்டது. மேலும் மேலும் வளர்கின்ற தன்னம்பிக்கையோடு வியூகத்தின் மூன்றாவது ஆரத்தின் மேல் அபிமன்னன் சென்றபோது கர்ணன் அவனை எதிர்த்தான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் விற்போர் ஏற்பட்டது. “அபிமன்னன் சிறுவன் தானே? சீக்கிரமாகவே தோற்று ஓடிவிடுவான்!” என்றெண்ணிக் கர்ணன் அலட்சியமாகவே போரிட்டான். அபிமன்னனோ கர்ணனைக் கடுமையாக எதிர்த்தான். கர்ணன் அலட்சியம்மாகப் போர் செய்யவே அவனை வெல்வது மிகச் சுலபமாக இருந்தது. கால் நாழிகைப் போரிற்குள் அபிமன்னன் கர்ணனைத் தோற்கச் செய்து விட்டான். அடுத்தபடியாக அபிமன்னனை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றவர்கள் கிருதவன்மனும், கிருபாச்சாரியனும் ஆவர். அபிமன்னன் ஒருவன், அவர்கள் இருவர். இருவருமாகச் சேர்ந்து அம்புகளைச் சரமாரியாகத் தொடுத்தனர். முதலில் அதைச் சமாளிக்க முடியாது திணறிய அபிமன்னன், பின்பு மனத்தை உறுதி செய்து கொண்டு தானும் அவர்களைத் திணறச் செய்தான். கிருதவன்மனும் கிருபாச்சாரியனும் அபிமன்ன னுக்கு எதிர் நிற்க முடியாமல் தோற்று ஓடினார்கள். அதே சமயத்தில் சகுனியும் அவனுடைய பெரும் படைகளும், அவனது சொந்தப் புதல்வனும் அடங்கிய படை ஒன்று அபிமன்னனை ஐந்தாவது ஆரத்தில் எதிர்த்தது. எடுத்த எடுப்பிலேயே அபிமன்னன் செலுத்திய கூரிய அம்பு சகுனியின் புதல்வனை விண்ணுலகுக்கு அனுப்பியது. சகுனியோடு வந்தவர்களுக்கு இந்த சாவு பெரிதும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அபாயகரமான தோல்விக்கு