பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


4. பாண்டுவின் மரணம்

தீவினை எவரை அணுகினாலும் சரி, சொல்லிக் கொண்டு அணுகுவதில்லை. கண்ணுக்குத் தோற்றாமல் விளைவு நெருங்குகிறது வினை. பாண்டுவின் வினையும் இப்படித்தான் அவனை நெருங்கியது. வினைக்கும் விதிக்கும் முன்னால் மனிதன் எம்மாத்திரம்? அப்போது வசந்தகாலம்! தபோவனத்தைச் சுற்றி வசந்த கால எழில் மனோரம்யமாகப் பரவியிருந்தது. மரங்களின் பசுமைப் பரப்பிற்கு நடு நடுவே செவ்வண்ண மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. தென்றல் மனோகரமாக வீசிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சூழ்நிலை, பாண்டு மான் தோலை விரித்து அமர்ந்து கொண்டிருந்தான்.

ஆசிரம வாசலில் மாத்திரி நீராடி விட்டுக் கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்தாள். அவள் நின்று கூந்தலைப் புலர்த்திக் கொண்டிருந்த நிலை கண்டோர் காமுறத்தக்க கவர்ச்சியினதாக இருந்த்து. தவத்துக்காக அமர்ந்து கொண்டிருந்த பாண்டு, கண்கள் இமையாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், நீராடி முடிந்த நிலையில் கடைந்தெடுத்தவை போன்ற அவளுடைய அங்கங்கள் ஓளி நிறைந்து தோன்றிக் காணும் கண்களை வசீகரித்தன. தோகை விரித்தாடும் இளமயில் போல் அவள் தன்னை மறந்த அவசத்துடன் கூந்தலைக் கோதிக் கொண்டேயிருந்தாள். பாண்டுவின் மனத்தில் அவளுடைய இந்த மோகனமான தோற்றம் ஆசைத் தீயை மூட்டியது. அங்குசத்தையும் பாகனையும் மீறிக் கொண்டு மதத்தால் கொழுத்து ஓடும் யானையைப் போலத் தவத்தையும் ஒழுக்கத்தையும் மீறிக் கொண்டு அவன் மனம் மோகவெறியில் ஆழ்ந்தது. மாத்திரியின் குமுதச் செவ்விதழ்களும், கொஞ்சும் கிளி மொழியும் அவன் தவத்தை அபகரித்தன. அவன் மான்