பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/433

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
431
 

வியூகத்தில் நிற்க வேண்டாம் என்று வெளியே வருவதற்காகத் திரும்பினான். திரும்பிய போது தேர் செல்ல வேண்டிய பாதை மேல் கொன்றைமாலை விழுந்து கிடப்பதைக் கண்டு தயங்கினான். “சிவபெருமானுக்கு விருப்பமான அழகிய கொன்றை மலர் மாலை வழிமேல் வீழ்ந்து கிடக்கிறது. அதை மிதித்துக் கொண்டு தேரைச் செலுத்தலாமோ? அங்ஙனம் செய்வது எம்பெருமானையே அலட்சியம் செய்தது போல் அல்லவா ஆகும்?” என்றெண்ணியே அபிமன்னன் வியூகத்திலிருந்து வெளியேறும் கருத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் வியூகத்திற்குள்ளேயே சென்று எஞ்சியிருந்த எதிரிகளோடு போர் செய்யலானான். ஏறக்குறைய இதே சமயத்தில் வீமன் தன்னை வழிமறித்த எதிரிகளை விரட்டிவிட்டுத் தன் தேரை அபிமன்னன் பக்கமாக வியூகத்திற்குள் செலுத்துவதற்குத் திருப்பினான். திரும்பிய வேகத்தில் வழிமேல் கிடந்த கொன்றைமாலை அவன் கண்களில் தென்பட்டது. உடனே தீயை மிதித்தவன் போல் திடுக்கிட்டுப் போய்த் தேரை இழுத்துப் பிடித்து நிறுத்தினான். தெய்வப் பிரசாதமாகிய கொன்றை மாலையைக் கடந்து தேரைச் செலுத்தக் கூடாது என்ற உறுதி அவன் மனத்தில் ஏற்பட்டது. ‘வழிமேல் குறுக்கே கொன்றை மாலையைக் கொண்டு வந்து போட்டது யார்? எதற்காகப் போட்டிருக்கக்கூடும்? என்று தனக்குள் சிந்தித்த வீமன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டான். தான் அபிமன்னனை நெருங்க விடாமலும் அபிமன்னன் வியூகத்தை விட்டு வெளியே வராமலிருப்பதற்காகவும் செய்யப்பட்ட சூழ்ச்சியே அந்தக் கொன்றைமாலையின் உருவத்தில் அங்கே கிடக்கிறது என்பதை விளங்கிக் கொண்டான். ‘வீமன், அபிமன்னன், இருவருமே கொன்றை மாலையைத் தாண்டிச் செல்லாமல் வணங்கிவிட்டுத் தத்தம் இருப்பிடங்களுக்கே திரும்பி விட்டதைக் கண்ட துரியோதனன் தன் சூழ்ச்சி பலித்ததென்று களிப்டைந்தான். துரியோதனனுடைய களிப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. வெளிப்புறம் திரும்பிய வீமனும் உட்புறம்