பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/434

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
432
அறத்தின் குரல்
 

திரும்பிய அபிமன்னனும் தங்களுடைய ஆத்திரம் முழுவதையும் ஒன்று திரட்டி எதிரிகளைக் கடுமையாகத் தாக்குவதற்குத் தொடங்கினர். கர்ணன் அபிமன்னனை எதிர்க்க முன் வந்தான். வந்த வேகத்திலேயே அவன் வில்லை முறித்துக் கீழே தள்ளினான் அபிமன்னன். இதைக் கண்ட மாத்திரத்திலேயே கர்ணனுடன் வந்தவர்கள் பயந்து ஓடிவிட்டனர். துரோணரும் அவர் புதல்வன் அசுவத்தாமனும் அடுத்து அவனை எதிர்த்தனர். ஆத்திரத்திலும் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் செயல் செய்யும் சக்தி பெருகுவது இயல்பு. கர்ணனை விடப் படுதோல்வியடைந்து ஓடினார்கள் துரோணரும் அவர் மகனும். இறுதியாகத் துன்முகன் என்ற பெருவீரன் வந்து எதிர்த்தான். அவனையும் ஓட ஓட விரட்டியபின் எதிர்ப்பதற்கு ஆள் இன்றித் தனியே நின்றான் அபிமன்னன். இவற்றையெல்லாம் கண்ட துரியோதனனுக்கு அங்கேயே அப்பொழுதே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. “கேவலம் ஒரு சிறு பிள்ளை! பேரரசனாகிய தன்னையும் தன் படைகளையும் எவ்வளவு அலட்சியமாகத் தோற்று ஓடச் செய்கிறான்?” என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான். உடனே ஏமாற்றத்தாலும் தோல்வியாலும் உண்டான குரோதம் அவனுடைய மனத்தில் குமுறிற்று. “இளைஞனாகிய இவனை இளைஞர்களைக் கொண்டே தோற்கச் செய்கிறேன்” என்று தீர்மானித்துக் கொண்டு தன் மகன் இலக்கண குமாரனைக் கூப்பிட்டு அனுப்பினான். பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த பதினாயிரம் இளவரசர்களை ஒன்று சேர்த்தான். அந்தப் பதினாயிரம் இளவரசர்களுக்குத் தன் மகன் இலக்கண குமாரனை தலைவனாக நியமித்து அபிமன்னனை எதிர்ப்பதற்காக வியூகத்திற்குள் அனுப்பினான். பல எலிகள் ஒன்று சேர்ந்து தங்கள் அறியாமையால் பூனையை எதிர்க்க முற்பட்டது போல் அரசகுமாரர்களின் கூட்டம் அபிமன்னனை வளைத்துக் கொண்டது. அபிமன்னன் புயல் வேகத்தில் கணைகளை அவர்கள் மேல் தூவினான். ஒரு