பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/436

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
434
அறத்தின் குரல்
 

மற்றும் பல பெரிய அரசர்களும் ஒன்று சேர்ந்து அபிமன்னனைச் சுற்றி ஆயுதங்களோடு வளைத்துக் கொண்டார்கள். இந்தப் பெரும் படையையும், இதன் குமுறலையும் கண்டுகூட அபிமன்னன் மனம் கலங்கிவிடவில்லை. சற்றும் தளராமல் இவர்களை எதிர்த்து வில்லை வளைத்தான். அம்புகளைத் தூவினான். அவனுடைய அம்புகளால் மாண்டவர் பலர். மாளாமல் காயமுற்று வீழ்ந்தவரும் பலர் . துரியோதனனின் இளைய சகோதரனாகிய துச்சாதனனும் மாமனான சகுனியும், களத்தை விட்டு ஓடியே போய் விட்டார்கள். வேறு சிலருக்குத் தேர்கள் இழக்கும் நிலை ஏற்பட்டது. வில்லொடியும் நிலை ஏற்பட்டதனால் வெறுங்கையோடு நின்றவர் சிலர். சிரங்களை இழந்து வெறும் முண்டங்களாய்த் தரையிலே வீழ்ந்தவர் சிலர். கை கால்கள் அறுபட்டு வீழ்ந்தவர் சிலர். நெஞ்சிலே வலிமையும் உடம்பிலே துணிவும் இன்றித் தாமாகவே ஓடிப் போனவர்கள் சிலர். இதைக் கண்டு ஏற்கனவே பெரிதும் சலனமடைந்திருந்த துரியோதனன் மிகுந்த கலக்கமடைந்தான்.

கர்ணனை அழைத்து, “கர்ணா! இந்த இக்கட்டான நிலைமையை இப்படியே மேலும் வளர விட்டுவிட்டால் அதனால் துன்பமடைகிறவர்கள் நாம் தான். இந்த அபிமன்னனோடு வீமனும் அர்ச்சுனனும் வேறு சேர்ந்து கொண்டால் நாம் தோற்றுப் போவதும் நமது சக்கர வியூகம் அழிவதும் உறுதி. ஆகையால் நீ அபிமன்னனை நேருக்கு நேர் எதிர்த்துப் போர் செய்” என்று கட்டளையிட்டான். உடனே கர்ணன் அபிமன்னனோடு நெருங்கி நின்று போர் செய்யப் புறப்பட்டான். அபிமன்னனுக்கும் கர்ணனுக்கும் போர் தொடங்கிற்று. தொடக்கத்தில் இரண்டு மூன்று முறை அபிமன்னனுடைய விற்போரைச் சமாளிக்க முடியாமல் தோற்றோடினான் கர்ணன். மூன்று முறை தோற்றவன் நான்காவது முறையாக அபிமன்னனை எதிர்த்து வந்தபோது அடக்கமுடியாத கோபத்தோடு வந்திருந்தான். இந்த முறை விதியும் கர்ணன் பக்கம் துணை செய்துவிட்டது, கர்ணன்