பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
அறத்தின் குரல்
 


தோலிலிருந்து எழுந்தான். தவத்தை மறந்தான். தணிக்க முடியாத ஆசை வெறியால் இந்த முனிவரின் சாபத்தையும் மறந்து மாத்திரியை அணுகினான் அவன். அடுத்த வினாடி மாத்திரி அவன் கையில் விளையாட்டுப் பாவையாக மாறினாள். அவன் கரங்கள் ஆசை தீர அவளைத் தழுவி முயங்கின. அதே நேரத்தில் சரியாகத் தொலைவில் எங்கோ ஓர் ஆந்தை பயங்கரமாக ஒரு முறை அலறி ஓய்ந்தது. முயங்கிய பாண்டுவின் கரங்கள் சோர்ந்தன. அவனுக்கு மூச்சுத் திணறியது. கை கால்கள் ஓய்ந்து கொண்டு வந்தன. சிறிது சிறிதாக உணர்வு ஒடுங்கிக் கொண்டே வந்தது. மாத்திரி ஒன்றும் புரியாமல் திகைத்தாள். அவள் திகைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் உடல் வேரற்ற மரம் போலக் கீழே சாய்ந்தது! அந்த உடலிலிருந்து உயிர் நீங்கிவிட்டது.

முனிவரின் சாபத்திற்கு வெற்றி பாண்டுவின் ஆசைக்குத் தோல்வி! மாத்திரி கதறி ஓலமிட்டு அழுதாள்; அலறினாள்; அரற்றினாள். குந்தியும் புதல்வர்களும் அவள் அலறலைக் கேட்டு ஓடி வந்தனர். பாண்டுவின் திடீர் மரணம் அவர்களையும் கதறியழச் செய்தது. எல்லோரையும் அழவைத்த விதி எங்கோ தனிமையில் எவரும் காணாதபடி பாண்டுவை, தான் வென்றுவிட்டதாகச் சிரித்துக் கொண்டிருந்தது! இவர்கள் அழுதார்கள்! விதி சிரித்தது ! இவர்களுடைய அழு குரலைக் கேட்டுத் தபோவனத்தைச் சேர்ந்த மற்ற முனிவர்களும் வந்து கூடினார்கள். குந்தி, மாத்திரி, பாண்டவர்கள் ஆகியோர்க்கு அந்த முனிவர்கள் ஆறுதல் கூறினர். புதல்வர்களைக் கொண்டு பாண்டுவின் அந்திமக் கிரியைகளை நிறைவேற்றினர். கணவன் இறக்கத் தான் காரணமாகியதனால் மாத்திரி, தானும் ஈமச் சிதையில் விழுந்து கணவனுடனேயே விண்ணுலகு எய்தினாள்.

‘புதல்வர்களைக் காத்துய்க்க வேண்டும்’ என்ற கடமையை மேற்கொண்ட குந்தி மனத்தைக் கல்லாகச் செய்து பொறுத்துக் கொண்டவளாய் இவ்வுலகில் தங்கினாள். பாண்டவர்கள் ஐவரும் தாயாலும் காசிபர் முதலாகிய