பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

அறத்தின் குரல்

கொல்லவில்லையானால் நாளை மாலை நான் தீயில் வீழ்ந்து இறப்பேன். என்னை அப்போது யாரும் தடுக்கவே முடியாது. என் மகனைக் கொன்றவனை என்னால் பழி வாங்க முடியவில்லையானால் நான் கொடுமையான நரகத்துக்குப் போகும்படி ஆகுக” என்று இவ்வாறு ஆத்திரத்தோடு பல சபத மொழிகளைக் கூறினான். அப்போது அங்கே கூடியிருந்த யாவர் செவிகளிலும் வீரமொழிகளாகிய இவை கேட்டன. அர்ச்சுனனின் கடுமையான இந்த சபதத்தைக் கேட்டுத் தருமர் திடுக்கிட்டார்.

“கண்ணா! இது என்ன? இவன் இப்படி முரட்டுத்தனமாக ஆத்திரத்தில் ஏதேதோ சபதம் செய்கிறானே? இவன் சொல்லுவது போல நாளை மாலைக்குள் சயத்திரனை இவனால் கொல்ல முடியுமா? முடியாவிட்டால் தீயிலே பாய்ந்து இறப்பேன் என்று வேறு சபதம் சொல்லியிருக்கிறானே? இவன் தீயில் பாய்ந்து இறந்தால் பின்பு நாங்கள் மட்டும் எப்படி உயிர் வாழ்வோம்? தீயில் பாய்ந்து இவன் உயிரை விட்டால் நாங்களும் உயிரை விட வேண்டியது தான்! என்ன செய்வது? நீ சர்வக்ஞன், நீதான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்” என்று தருமர் கண்ணனை நோக்கி மனமுருக வேண்டிக் கொண்டார்.

“தருமா கவலைப்படாதே. யாவும் நலமாக நிறைவேறும். அர்ச்சுனனுடைய சபதம் நிறைவேறாமலிருந்தால் தானே அவன் தீப்பாய்வான்’ என்று சொல்கிறான். அவனுடைய சபதம் நிறைவேறும்படி செய்து விடுவோம்.”

“அப்படியானால்...”

“அபிமன்னனைக் கொன்ற சத்திரதனை எவ்வாறேனும் நாளை மாலைக்குள் பழி வாங்கிவிட்டால் போகிறது. அர்ச்சுனனும் தீப்பாயமாட்டான். நீங்களும் வீண் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை.”

“அது முடிகிற காரியமா?” என்று மலைப்புடன் கூறினார் தருமர்.