பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

443


“முடிகிற காரியமோ? முடியாத காரியமோ? எல்லாவற்றையும் முடித்து வைப்பவன் நான் அல்லவா?” - இவ்வாறு கூறிக்கொண்டே புன்னகை புரிந்தான் கண்ணன்.

6. அர்ச்சுனன் சபதம்

அர்ச்சுனனுடைய சபதம் வெற்றி பெறுவதற்கான செயல்களைத்தான் செய்வதாகக் கண்ண பிரானே முன்வந்ததைக் கண்டு தருமர் பெருமகிழ்ச்சி அடைந்தார். தனது இதயம் நிறைந்த நன்றியைக் கண்ணனுக்கு அப்பொழுதே தெரிவித்தார். “தருமா! சயத்திரதனைக் கொல்ல வேண்டுமென்று அர்ச்சுனன் செய்துள்ள சபதத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு என் ஒருவனுடைய துணை மட்டும் போதாது. இப்போது நானும் அர்ச்சுனனும் இரவோடிரவாகத் திருக்கைலாயத்திற்குச் சென்று சிவபெருமானின் அனுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வேண்டும். எப்படியும் நாளை உதயத்திற்குள் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினான் கண்ணன். ‘சரி! அவசியமானால் செல்லத்தானே வேண்டும்? சென்று வாருங்கள்” என்று விடை கொடுத்து அனுப்பினார் தருமர். கண்ணனும் அர்ச்சுனனும் திருக்கயிலையை நோக்கிப் புறப்பட்டார்கள். சிறிது தொலைவு நடப்பதற்குள்ளேயே அர்ச்சுனனுக்குக் கைகால்கள் எல்லாம் சோர்ந்து களைப்பாக வந்தது. அவன் வாய் திறந்து சொல்வதற்கு முன்பே அந்தக் களைப்பை உணர்ந்து கொண்டான் கண்ணன்.

“அர்ச்சுனா! அருமைப் புதல்வனைப் பறிகொடுத்த துயரத்தினால் உன் உடலும் மனமும் சோர்வடைந்திருக்கின்றன. இன்று நீ உணவும் உண்ணவில்லை. நடப்பது சிரமமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? பொறுத்துக் கொள். மனித உடல் நிலையாதது. மூப்பு, பிணி, சாவுகளுக்கு உட்பட்டது; பிறவியும் சாவும் எங்கும் எப்போதுமே இயற்கை நியதிகள், என்று எத்தனை எத்தனை நல்லறிஞர்கள்