பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

அறத்தின் குரல்

கூறியிருக்கிறார்கள்? அவ்வுரைகளையெல்லாம் மறந்து இவ்வாறு கலங்குதல் பொருந்துமா? நீ உணவு உண்ணாமல் இருப்பதனால் இறந்து போன அபிமன்னனுக்கு உயிர் வந்து விடுமோ? கவலையைக் கைவிடு. நான் சொல்வதைக் கேள். இதோ இந்த வழியிலுள்ள அரிய தோட்டங்களில் எண்ணற்ற பழமரங்களும் நீர் நிறைந்த பொய்கைகளும் உள்ளன. மா, பலா, வாழை ஆகிய கனிகளை உண்டு நீர் பருகலாம். நடப்பதற்கும் தெம்பு உண்டாகும்” என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு ஆறுதல் கூறினான்.

“கண்ணா! ஒவ்வொரு நாளும் சிவபெருமானை வழிபாடு செய்த பிறகுதான் நான் உண்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா? இன்று இன்னும் நாம் சிவபூஜையே செய்யவில்லையே? எப்படி உண்பது? அதனால்தான் தயங்குகிறேன்”

“நீ தயங்கவேண்டாம்! உன் பூசையையும் இப்போது இங்கேயே முடித்துக் கொள்கிறதற்கு வழி சொல்லுகிறேன். அன்பர்கள் எந்தெந்த வடிவத்தை நினைத்துப் பூஜை செய்கிறார்களோ அந்த வடிவங்களிளெல்லாம் சிவபெருமான் குடி கொண்டிருக்கிறான். நீ இங்கே மலர்ந்துள்ள மலர்களைக் கொய்து இந்தக் குளத்தில் நீராடு. என்னையே சிவபெருமானாக எண்ணிக் கொண்டு எனக்குப் பூஜை செய். இவ்வாறு செய்தால் உன் குறை தீரும். சிவபெருமானும் நானும் ஒரே அம்சத்தின் இருவேறு பகுதிகள் என்பதைக் கயிலையை அடைந்ததும் நீயாகவே தெரிந்து கொள்வாய்.”

அர்ச்சுனன் மறுக்காமல் கண்ணன் கூறியபடியே நீராடி மலர்களைக் கொண்டு அவனையே சிவபெருமானாகக் கருதிப் பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் அந்த வளமான சோலையிலிருந்த மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் முதலிய பழங்களை உண்டு மகிழ்ந்தான். தன்னுடைய வாகனமாகிய கருடனை அப்போது உடனே அங்கே வருமாறு மனத்தில் தியானித்தான் கண்ணன். நினைத்த அளவில் கருடவாகனம் அங்கே வந்து சேர்ந்தது.