பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/453

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
451
 

சயத்திரதனைப் பகைவர்கள் நெருங்கிவிடமுடியாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சயத்திரனைக் கொல்ல முடியாவிட்டால் அர்ச்சுனன், தான் செய்திருக்கும் சபதப்படியே தீயில் விழுந்து இறந்து போவான். அவன் தீயில் விழுந்து இறந்தால் மற்றவர்களாகிய தருமன் முதலியோர் அதைப் பொறுக்க மாட்டார்கள். வேதனை பொறுக்க முடியாமல் அவர்களும் தீயில் விழுந்து மாண்டு போவார்கள். இப்படியாக அவர்கள் ஐந்து பேரும் மாண்டு போய்விட்டால் பின்பு இவ்வுலகில் நம்மை எதிர்க்க எவருமே கிடையாது. நமது அரசுதான் இந்த உலகம் முழுவதும் நிகழும். ஆகவே என்ன முயற்சி செய்தாவது நாளைப் போரில் சயத்திரதனின் உயிருக்குத் துன்பம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியதவசியம்” என்று வேண்டிக் கொண்டான்.

“உன் வேண்டுகோளை நிறைவேற்ற எங்களால் இயன்ற மட்டும் முயன்று பார்க்கிறோம்” என்றார் துரோணர்.

“இயன்ற மட்டும் என்ன? கட்டாயமாக நிறைவேற்றியே தீருவேன் நான்” என்று அகந்தையால் வீம்பு பேசினான் கர்ணன்.

“நாளை ஒரு நாள் மட்டும் எப்படியாவது சயத்திரதனை காப்பாற்றி விடுகிறோம். பின்பு முடியாது” என்றான் துன்மருஷ்ணன் என்பவன். சயத்திரதனைக் காப்பாற்ற முடியும் என்பதில் அங்குள்ள மற்றொருவருக்கும் நம்பிக்கை இல்லை. அவர்கள் பேசாமல் மௌனம் சாதித்துவிட்டனர். ஒரு சிலர், “காக்க முடிந்தால் காக்கிறோம்” என்று சந்தேகத்தோடு பதில் கூறினார்கள். “காத்துவிடலாம்” என்று மனப்பால் குடித்தான் துரியோதனன். துரியோதனனின் பாசறை நிலை இவ்வாறிருக்கத் திருவும் அருளும் பெறக் கயிலை சென்றிருந்த கண்ணனும், அர்ச்சுனனும் திரும்பி வந்தனர். தருமன் அவர்களை அன்போடு தழுவி வரவேற்றான். கண்ணனும், அர்ச்சுனனும் கயிலையில் நிகழ்ந்தவற்றைத் தருமன் முதலியவர்களுக்கு விவரித்துரைத்தனர். அப்போது