பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

அறத்தின் குரல்

நேரம் போர் செய்து நேரத்தைக் கழித்துவிடக்கூடாது என்பது கண்ணன் ஆசை. மாலைக்குள் சபதப்படி சயத்திரதனைக் கொன்றாக வேண்டும். ‘எதிரே வந்தவர்களுடன் எல்லாம் நீண்ட நேரம் போர் செய்து நேரத்தை வீணாக்கிவிட்டால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அர்ச்சுனன் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே?’ என்பது கண்ணனின் பயம். இதனால் தேர் துரோணரைக் கடந்து மேலே செல்லும்படி அடுத்த வியூகத்திற்குள் வேகமாகச் செலுத்தினான் கண்ணன். தேர் தன்னைக் கடந்து சத்திரதன் இருந்த பக்கமாக உட்புறத்தில் முன்னேறுவதைப் பார்த்து துரோணர் திடுக்கிட்டு வில்லை வளைத்து அர்ச்சுனன் தேரைப் போகவிடாமல் மறித்து மேலும் போருக்கு அழைத்தார்.

“சுவாமி! என்னை விட்டு விடுங்கள். நான் உங்களுடனேயே முழு நேரமும் போர் செய்து கொண்டிருந்தால் என்னுடைய சபதத்தை எப்போது நிறைவேற்றுவது? தவிரவும் நீங்கள் ஆசிரியர். நான் உங்கள் மாணவனாக இருந்தவன். உங்களோடு போரிட்டு என்னால் வெல்வதற்கு முடியுமா? எனது சபதம் நிறைவேற உங்கள் சிறிய உதவி இந்த அளவிலாவது சேரக்கூடாதா?” என்று புன்முறுவல் பூத்த முகத்தோடு துரோணரைப் பார்த்து மனங்குழையக் கேட்டான் அர்ச்சுனன். அவனுடைய குழைந்தப் பேச்சும் இதயத்தைக் கவ்வும் புன்முறுவலும் துரோணர் மனத்தை எப்படித்தான் மாற்றினவோ தெரியவில்லை. மந்திர சக்தியால் கட்டுண்டவர் போல் துரோணர் அப்படியே நின்று விட்டார். தன்னை மறித்துக் கொண்டிருந்த ஒரே ஒரு தடையும் மறைந்து விடவே அர்ச்சுனனுடைய தேர். சுலபமாக இரண்டாவது வியூகத்திற்குள் புகுந்து விட்டது. அர்ச்சுன்னுடைய தேர் புகுந்த இரண்டாவது வரிசையில் காம்போஜம் முதலாகிய பெரிய பெரிய நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி எதிர்த்தனர். அவன் சிறிதும் மலைக்காமல் அவர்களோடு விற்போரைச் செய்தான்.