பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/459

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
457
 

சொல்கிறேன் கேள். இவனுடைய தாயின் பெயர் பன்னவாகை. தந்தையின் பெயர் வருணராஜன். தந்தையின் வலிமையால் அவனிடமிருந்து சில ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய மந்திர தந்திரங்களையும் இவன் கற்றுக் கொண்டிருந்தான். இவன் எய்கின்ற ஆயுதங்கள் வேறு படைக்கலங்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் மேலே பட்டால் அவர்களை நிச்சயமாக கொன்றே தீரும். ஓர் ஆயுதமும் இல்லாத வெறுங்கையர்கள் மேல் பட்டாலோ இவனே இறக்கும்படி நேரிட்டுவிடும். இவனைப் பற்றிய இந்த இரகசிய உண்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே இவன் உன்மேல் ஏவிய கதாயுதத்தை நான் இடையில் தடுத்து என் மார்பிலேயே தாங்கிக் கொண்டு இவனைக் கொன்று முடித்தேன்” என்று கண்ணபிரான் சுதாயுவின் கதையை அர்ச்சுனனுக்குக் கூறி முடித்தான். சுதாயு இறந்ததைக் கண்டு அவன் தம்பியாகிய சதாயு என்பவன் தன் படைகளோடு அர்ச்சுனனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். மற்றும் பல அரசர்களும் தேர்களும் ஓடி வந்து அவனை எதிர்த்தனர். சகசிரபாகு என்ற அரசனும் எதிர்த்தான். சதாயு, சகசிரபாகு, இவர்கள் இருவரிடமுமே படைகள் நிறைய இருந்தனவே ஒழியச் சொந்த வலிமை சிறிதும் இல்லை. எனவே அர்ச்சுனன் இவர்களிருவரையும் விரைவில் தோற்கச் செய்துவிட்டு மேலே சென்றான். அவனுடைய தேர் பலவகையிலும் முயன்று வியூகத்தை உடைத்துக் கொண்டு சயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது கண்ணபிரான், “அர்ச்சுனா! குதிரைகள் தண்ணீர்த் தாகத்தால் மிகவும் களைத்து ஓய்ந்து போய் விட்டன. இந்த விநாடியே குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டினால் ஒழிய இவை மேலே ஓர் அடிக்கூட நகரமாட்டா! இப்போது இந்த நட்டநடுப் போர்க்களத்திலே தண்ணீருக்கு எங்கு போவது?” -என்று மனம் வருந்திக் கேட்டான். கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் தன்னிடமிருந்த வருணாஸ்திரத்தை எடுத்தான். சிவபெரு