பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

462

அறத்தின் குரல்

பிளந்து விட வேண்டுமென்ற வெறியினாலும் ஒரு பெரிய வேலாயுதத்தை எடுத்துக் குறிவைத்து வீசி எறிந்தான். அர்ச்சுனன் இவ்வாறு துரியோதனன் மேல் வேல் எறிவதைப் பார்த்துக் கொண்டே இருந்த அசுவத்தாமன், திடீரென்று குறுக்கே இன்னொரு வேலை எறிந்து அதைத் தடுத்துக் கீழே தள்ளிவிட்டான். தனது கடைசி முயற்சியும் அசுவத்தாமனால் தடை செய்யப்பட்டு விட்டதைக் கண்ட அர்ச்சுனன் மனம் உடைந்து போய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் தளர்ந்து நின்றான். தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணபிரான் மின்னல் வெட்டும் நேரத்திற்குள் அர்ச்சுனனுடைய தளர்ச்சியைப் புரிந்துகொண்டான்.

“அர்ச்சுனா! மலைக்காதே. இந்தா, இன்னொரு வேலை எடுத்துக் கொள். கையில் வைத்துக் கொண்டிரு. நான் சைகை காட்டும்போது துரியோதனனுடைய கவசத்தைக் குறி வைத்து எறிந்துவிடு. இப்படிச் செய்தால் அவன் கவசம் நிச்சயம் உடைந்துவிடும்! இதோ அதற்கு நான் ஒரு தந்திரம் செய்கிறேன் பார்” என்று அர்ச்சுனன் கையில் வேலைக் கொடுத்துவிட்டுத் தனது சங்கை எடுத்து யாவரையும் மயக்குகின்ற இனிய ஒலி உண்டாகுமாறு அதை ஊதினான். கண்ணனுடைய அற்புதமான சங்க நாதத்தைக் கேட்டு மகுடியோசைக்குக் கட்டுப்பட்ட நாக சர்ப்பங்களைப் போல யாவரும் தம்மை மறந்து தம் நிலையை மறந்து நின்று கொண்டிருந்தனர். கண்ணன் ஒருவன் தான் விழிப்புடனிருந்தான். துரியோதனன், அவனைச் சுற்றியிருந்த படைகள், அர்ச்சுனன் முதலிய யாவருமே அந்த இனிய சங்க நாதத்தில் இலயித்துப் போயிருந்தனர். இதுதான் சமயமென்று கண்ணன் அர்ச்சுனன் பக்கமாகத் திரும்பி மெல்ல அவனுக்குச் சைகை காட்டினான். சைகையை அறிந்து தன் நிலை உணர்ந்த அர்ச்சுனன் துரியோதனனின் கவசத்தைக் குறிவைத்து வேலை வீசி எறிந்துவிட்டான். யாரும் தடுக்கவில்லை. வேல் துரியோதனனுடைய உடற்கவசத்தை இரு கூறாகப் பிளந்து கீழே தள்ளிவிட்டது. கவசம் கீழே விழுந்த பின்பே தான்