பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

அறத்தின் குரல்

உன்னோடு போர் செய்யாமல் விடமாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே போரை ஆரம்பித்து விட்டார் துரோணர். சொல்லியும் கேட்காமல் துரோணர் போரைத் தொடங்கவே வேறு வழியின்றிச் சாத்தகியும் அவரோடு போர் செய்யவேண்டியதாயிற்று. துரோணருக்கும் சாத்தகிக்கும் நீண்ட நேரம் போர் நிகழ்ந்தது. வெற்றியுமின்றித் தோல்வியுமின்றி இருவருமே களைத்துப் போனார்கள். இருவர் கைகளும் அலுத்து ஓய்ந்துவிட்டன. துரோணர் போரை நிறுத்திச் சாத்தகிக்கு வழிவிட்டு விட்டார். சாத்தகி விரைவாகச் சென்று அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைந்தான். அர்ச்சுனனுக்கு உதவி செய்வதற்காகச் சாத்தகியை அனுப்பிய தருமன் அவ்வளவில் மனத்திருப்தி அடைந்து விடவில்லை.

“அர்ச்சுனனுக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. வீமா! நீயும் புறப்பட்டுச் செல்” என்று வீமனையும் அனுப்பினான். முன்பு சாத்தகியை வழி மறித்தது போலே வீமனையும் பலர் வழிமறித்து நிறுத்தினார்கள். வீமனா சும்மா விடுவான்? அவர்களை நிர்மூலப்படுத்திவிட்டு மேலே சென்றான். சாத்தகியை எதிர்த்தது போலவே வீமனையும் எதிர்க்க வந்தனர். துரியோதனுடைய தம்பியர்கள். ஐம்பதுக்கு மேலுமிருந்த அவர்கள் தொகையில் ஏறக்குறைய முப்பத்தைந்து பேரை அப்போது அங்கேயே நமனுலகுக்கு அனுப்பி விட்டான் வீமன். எஞ்சிய சகோதரர்கள் நமக்கு உயிர் பிழைத்தால் போதும் என்று பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர். இவர்களெல்லாம் ஓடிப் போனபின் துரோணர் சாத்தகியோடு போர் செய்த களைப்பெல்லாம் தீர்ந்து வீமனுக்கெதிரே வந்து வில்லை வளைத்தார். வீமன் அதைக் கண்டு திடுக்கிட்டான்.

“நீங்கள் என் மதிப்பிற்குரிய ஆசிரியர். உங்களோடு நான் போர் செய்யலாமா? வேண்டாம். தயவு செய்து என் வழியை எனக்கு விட்டுவிடுங்கள்” என்று கைகூப்பி வணங்கி அவரிடம்