பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/467

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
465
 

இறைஞ்சினான். ஆனால் துரோணர் அவனுடைய சொற்களையோ, வணக்கத்தையோ, இணக்கத்தையோ பொருட்படுத்தவில்லை.

“ஆசிரியன், மாணவன் என்ற அந்த உறவை எல்லாம் இப்போது நினைக்காதே. மறந்துவிடு. நீயும் நானும் இப்போது பகைவர்கள்” என்று கூறிக்கொண்டே அவனுடன் போர் செய்தார். துரோணருக்கும் வீமனுக்கும் கடுமையான விற்போர் ஏற்பட்டது. போர் தொடர்ந்து நடந்தது. ஆசிரியர், கெளரவிக்கத் தக்கவர் என்ற மரியாதைகளெல்லாம் மறைந்து துரோணர் மேல் வீமசேனனுக்கும் கோபம் ஏற்பட்டுவிட்டது. வீமன் தன் தேரை விட்டுக் கீழே இறங்கித் துரோணருடைய தேரை நோக்கி நடந்து சென்றான். குபீரென்று பாய்ந்து துரோணரது தேரை அப்படியே அந்தரத்தில் வாரித் தூக்கி எறிந்தான். தேரிலிருந்து தூக்கி எறியப்பட்ட துரோணர் உடல் ஒரு மூலையில் போய் விழுந்தது. அப்போது சில எலும்புகள் கூட நொறுங்கிவிட்டன. துரோணருடைய தேர் தூள் தூளாக ஒடிந்தது. அதில் வீற்றிருந்த தேரோட்டி கீழே வீழ்ந்து நசுக்குண்டு இறந்தான். கீழே விழுந்த துரோணருக்குத் தன் நினைவு இல்லை. வீமன் மேலும் முன்னேறிச் சென்றான். அவன் துரோணருடைய தேரைத் துவம்சம் செய்துவிட்டு மேலே செல்லுவதைத் தொலைவிலிருந்த துரியோதனாதியர் படையைச் சேர்ந்த பூரி, அவந்தி ராஜன் முதலியவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே அவர்கள் ஆயுதமும் கையுமாக வந்து வீமனை வளைத்துக் கொண்டனர். துரோணரையே வென்று வீழ்த்திய வீமனுக்கு அவர்களா பிரமாதம்? சில விநாடிகளிலேயே அவர்களை வென்று துரத்திவிட்டு அர்ச்சுனனும் கண்ணனும் இருந்த இடத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அப்போது கர்ணன் வந்தான். கர்ணனும் வீமனும் போர் செய்தார்கள். துரோணருடைய தேரைத் தூக்கி எறிந்து ஓடித்தது போலக் கர்ணனுடைய தேரையும் ஒடித்து விட்டான் வீமன். ஆனால் அது

அ.கு. - 30