பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

467


“என் அண்ணனும் அவனைச் சேர்ந்தவர்களும் தீயவர்களாக இருக்கலாம். ஆனாலும் நான் உண்ட சோற்றுக்குக் கடன் கழித்தாக வேண்டுமே? அதற்காகத்தான் உன்னோடு போர் செய்ய முற்படுகிறேன்” என்றான் விகர்ணன். இதன் பின் வீமனும் வேண்டா வெறுப்பாக அவனோடு போர் செய்து அவனைக் கொன்றான். நல்லவனாகிய அந்த இளைஞனைத் தன் கையாலேயே கொல்ல நேர்ந்ததற்காக வீமன் உண்மையாகவே வருந்தினான். விகர்ணனுக்குப் பிறகு அவனை எதிர்க்க எவரும் முன் வரவில்லை. அவன் தன் தேரிலேறி அர்ச்சுனனிருக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தான். முன்பே தருமனால் அங்கு அனுப்பப்பட்டிருந்த சாத்தகியும் வீமனோடு அர்ச்சுனன் இருந்த இடத்தை அடைந்திருந்தான். இப்போது அர்ச்சுனனுக்கு இருபுறமும் இரண்டு பலமான துணைகள் ஏற்பட்டுவிட்டன. பகைவர் படைகளுக்கு நடுவில் இருந்த மூன்று பேர் இப்படி அகப்பட்டுக் கொள்ளவும் பூரிசிரவன் முதலிய பகைவர்கள் இவர்களை வளைத்துக்கொண்டு எதிர்த்தும் போர் புரியத் தொடங்கினார்கள்.

“அர்ச்சுனா! இந்தப் பூரிசிரவன் ஒரு பயங்கரமான எதிரி முதலில் இவனைக் கொன்று தீர்த்துவிடு” என்று கண்ணன் அர்ச்சுனனுக்குக் கூறினான். அக்கூற்றின்படியே பூரிசிரவனின் மேல் அம்பு எய்து அவனைக் கொன்றவன் அர்ச்சுனன். பூரிசிரவன் இறந்த செய்தி துரியோதனனுக்கு எட்டவே அவன் அங்கு விரைந்து ஓடிவந்தான். “இப்படி மூன்று பேராகச் சேர்ந்து கொண்டு ஒருவனைக் கொல்வது வஞ்சகம். இந்த மாதிரி அநியாயப் போர் கூடாது” என்று அர்ச்சுனனை நோக்கிக் கூப்பாடு போட்டான் துரியோதனன்.

“நீங்கள் நேற்று அபிமன்யுவைக் கொன்றதும் அதற்கு முன் முதல் நாள் போரில் சிவேதனைக் கொன்றதும் நியாயமான போர் முறையானால் இதுவும் நியாயமான போர் முறைதான்!” என்று அவனுக்குச் சுடச் சுடப் பதில் கூறினான் கண்ணபிரான். பேச வாயின்றித் தலை குனிந்து கொண்டு