பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


5. சோதரர் சூழ்ச்சிகள்

இளமைப் பருவத்துப் பழக்க வழக்கங்கள், நட்பு முதலியன யாவும் அடியிலிருந்து கரும்பு தின்பதைப் போன்றவை. அடிக்கரும்பின் கணுக்களிலிருந்து மேலே மேலே சுவைக்கும் போது உவர்ப்புத் தென்படுகிறதல்லவா? தந்தையின் மரணத்திற்குப் பின்பு பாண்டவர்கள் அத்தினாபுரிக்கு வந்து துரியோதனாதியர்களுடன் கலந்து பழகிய நட்பும் வளர வளரக் கசப்பையே அளித்தது. தேர்ப்பாகன் சூதநாயகன் ஆற்றில் கண்டெடுத்து வளர்த்து வந்த கர்ணனும் துரியோதனாதியர்களோடு சேர்ந்து அவர்கட்கு உயிர் நண்பனானான். சுபல நாட்டு மன்னன் துரியோதனாதியர் தாயாகிய காந்தாரிக்கு உறவினன். எனவே சுபல் மன்னனின் புதல்வன் சகுனியும் அத்தினபுரியில் வந்து தங்கித் துரியோதனாதியரோடு நெருங்கிப் பழகலானான்.

கர்ணன், சகுனி என்ற இவ்விருவரது புதிய பழக்கத்தால் தான் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பொறாமை தலைப்பட்டது. நட்பிலே பிளவு என்பது பொறாமை பகைமை இவைகளின் பிறப்பு ஆகும். மாங்காய் காம்போடு பொருந்தியிருக்கும் போது பால் வடிவதில்லை. காம்பிலிருந்து அதைத் தனியே பிரிக்கும் போது பால் வடியாமலிருப்பதில்லை. பொறாமைக்கும் பிளவுதான் காரணம். சகுனியும் கர்ணனுமாக நூற்றுவர் மனத்தைப் பாண்டவர்களிடமிருந்து தனியே பிரித்து விட்டனர். மனங்களின் இந்தப் பிரிவில் எழுந்த குரூரமான சூழ்ச்சிகள் ஒன்றா இரண்டா? பல சூழ்ச்சிகள் எழுந்தன. வானவிளிம்பை அளாவி நிற்கும் உயரமான மலைச்சிகரம் போலச் சத்தியத்தையும், தருமத்தையும் போற்றி உயர்வு பெற்று விளங்கும் தருமன், வல்லமையால் உலகையே வெல்லும் உடலும், உள்ளமும் ஊக்கமும் பெற்ற வீமன், சிந்தனை, செயல், அழகு, ஆண்மை, இவற்றில் நிகரின்றி நிற்கும் விஜயன்