பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/470

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
468
அறத்தின் குரல்
 

திரும்பினான் துரியோதனன். அர்ச்சுனனும் சாத்தகியாக வீமனும், மேலும் மேலும் முன்னேறிச் சயத்திரதனைக் கண்டு நெருங்குவதைப் பார்த்த கெளரவர்கள் திகைத்தனர். எவ்வாறேனும் சயத்திரதனைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஆசையினால் தரையிலேயே சுரங்கம் மாதிரி ஒரு பள்ளம் உண்டாக்கிச் சயத்திரதனை அதனுள் இறங்கச் செய்து மறைத்துவிட்டனர். சயத்திரதன் இருந்த இடத்தை நெருங்கிய அர்ச்சுனன் ஏமாற்றமடைந்து நின்றான். சயத்திரதன் உருவமே அவன் கண்களுக்குத் தென்படவில்லை. ‘கண்மூடித் திறக்கும் நேரத்தில் இங்கே நின்று கொண்டிருந்த சயத்திரதன் எவ்வாறு மறைந்திருக்க முடியும்? என்று மயங்கினான் அவன். ‘இதில் அடங்கியுள்ள சூது என்ன? என்று யோசித்தான் கண்ணன். வேண்டுமென்றே அருகிலுள்ள ஏதோ ஓர் இடத்தில் சயத்திரதனை எதிரிகள் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று உண்மை கண்ணனுக்குப் புரிந்துவிட்டது.

“அர்ச்சுனா! கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டுத் தன் வலது கையிலிருந்த சக்கராயுதத்தை வானத்தில் செலுத்திக் கதிரவன் மறையும்படி ஒரு மாயம் செய்தான் கண்ணன். முன்னவனே முன் நின்றால் முடியாத சூழ்ச்சியும் உண்டா? கண்ணன் செய்த மாயத்தினால் திடீரென்று அந்தி இருள் கவிந்தது. கெளரவர்கள் இதைக் கண்டு உண்மையாகவே கதிரவன் மறைந்து விட்டான் என்றெண்ணிக் கொண்டு, “அர்ச்சுனன் இனிமேல் போர் செய்யமாட்டான். இருட்டுவதற்குள் சயத்திரதனைக் கொல்வதாகத்தானே சபதம் செய்தான்? இப்போதோ நன்றாக இருட்டி விட்டது. இனி அர்ச்சுனன் தன் சபதம் நிறைவேற்றாததால் தீயில் விழுந்து உயிர்விட வேண்டியது தான்!” என்று மகிழ்ச்சியாக ஆரவாரித்தார்கள். சயத்திரதன் வெளியே வந்தாலும் நிபந்தனை நேரம் கழிந்து விட்டதனால் அர்ச்சுனன் அவளை ஒன்றும் செய்ய முடியாது என்றெண்ணிக் கொண்டே கெளரவர்கள் சுரங்கப் பள்ளத்திற்குள் மறைந்திருந்த அவனை வெளியே கொணர்ந்து நிறுத்தி விட்டனர்.