பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. இரவிலும் போர்

‘மாயமா? மந்திரமா? சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்தபின் திடீரென்று மீண்டும் சூரியன் தோன்றி ஒளிவந்தது எப்படி? இது என்ன சூழ்ச்சி? யார் செய்த சூழ்ச்சி?’ துரியோதனாதியர் திகைத்தனர். சயத்திரதனைக் கொல்வதற்காகவே பாண்டவர்கள் கண்ணனின் உதவியோடு இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்க வேண்டுமென்று துரியோதனன் அனுமானித்தான். “கண்ணா! உன் சூழ்ச்சி எனக்கு ஒன்றும் தெரியாதென்றா நினைத்துவிட்டாய்? உன்னுடைய சக்கராயுதத்தினால் சூரியனைத் தற்காலிகமாக மறைத்து விட்டாய். நாங்கள் மோசம் போனோம். சயத்திரதனைப் பறிகொடுத்தோம். இப்படியெல்லாம் வஞ்சகம் செய்கிறீர்களே, நீங்கள் உருப்படுவீர்களா? இது அநியாயம்! பெரிய பாதகம்” -என்று கண்ணனையும் பாண்டவர்களையும் பார்த்துக் கூப்பாடு போட்டான் துரியோதனன்.

“நீங்கள் செய்திருக்கும் சூழ்ச்சிக்கு இது ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. நியாயத்தையும் அநியாயத்தையும் தீர்மானிப்பதற்கு உன் போன்றவர்களா ஆட்கள்? அவை நல்லவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்லவா?” என்று அவனுக்குக் கண்ணன் சுடச் சுடப் பதில் கூறினான்.

“உங்கள் வஞ்சனைப்படியே இன்னும் சில நாழிகைப் பொழுது எஞ்சியிருக்கிறதல்லவா? இதற்குள் பாண்டவர்களாகிய உங்கள் ஐந்து பேரையும் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்புகிறேன். உங்கள் குலத்தையே பூண்டோடு அழித்துவிடுகிறேன். இதை என்னால் செய்ய முடியாது போனால் நானே இறந்து விடுகிறேன்” -என்று ஆத்திரமாகக் கூறிக்கொண்டே தன் படைகளை ஒன்று சேர்த்தான் துரியோதனன். அடுத்த விநாடியில் அவனுடைய படைகளும்